

அரசியல் தலைவர்கள், Gen Z இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க, சமீப காலமாக பல உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். திமுகவின் ‘Gen Z Meet-up’ முதல், தவெக அமைச்சர்களின் ரீல்ஸ் வரை மாநில அரசியலில் இதைப் பார்த்திருக்கிறோம்.
மத்தியில், பிரதமரின் ரீல்ஸ் வைரலாகி வரும் நிலையில், ராகுல் காந்தி ‘Ask Me Anything’ ட்ரெண்டில் இறங்கியுள்ளார்.
அதில், Gen Z இளைஞர் ஒருவர், "நீங்கள் பேட்மேனா?" எனக் கேட்க, "என்னையும் பேட்மேனையும் ஒரே அறையில் ஒன்றாக யாரும் பார்த்தது இல்லை" என விளையாட்டாகப் பதிலளித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் தனக்குப் பிடித்த மீம் எது என்று கேட்டபோது, ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகத் தாக்கினார்.
"நள்ளிரவில் பிரதமர் இல்லத்திலிருந்து வெளியான வீடியோக்கள்தான் மிகச் சிறந்தவை என்று நான் நினைக்கிறேன்; அவை ஒரு புதிய, பீதியடைந்த பிரதமரைக் காட்டின" என்று அவர் கூறினார்.
ராகுல் காந்தி, இதமான கேள்விகளுக்கு நெகிழ்ச்சியாகவும், நகைச்சுவையான கேள்விகளுக்கு விளையாட்டாகவும், சீரியஸான கேள்விகளுக்கு சீரியஸாகவும் பதிலளித்தார்.
தன்னுடைய நாய் பற்றிய கேள்விக்கு, "நான் என்னை ‘நாய் பெற்றோர்’ (Dog Parent) என அழைக்க மாட்டேன். அவை நமக்குச் சொந்தமானவை என நான் நம்பவில்லை. நாம் விலங்குகளுடனும், அனைத்து உயிரினங்களுடனும் இந்தப் பூமியைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அவை மரியாதை, அன்பு மற்றும் பாசத்திற்குத் தகுதியானவை" எனப் பதிலளித்தார்.
அவரிடம், விருப்பமான பாஜக தலைவர் யார் என்று கேட்கப்பட்டபோது, 2022-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் எனக் குறிப்பிட்டார்.
"எனக்கு அவருடன் நன்றாகப் பழக்கம் உள்ளது. அவர் ஒரு அருமையான மனிதர். அவர் ராணுவ வரலாற்றில் நிபுணர்... வணக்கம், அமரிந்தர் மாமா" எனப் பேசினார்.
பிடித்தமான தத்துவங்கள் குறித்து பேசும்போது, "புத்தர், குருநானக் தேவ், பசவண்ணா ஜி, சங்கர்தேவ் ஜி, தர்தி அப்பா, பிர்சா முண்டா, பெரியார், மகாத்மா பூலே, நாராயண குரு ஜி, பாபாசாகேப் அம்பேத்கர், காந்திஜி மற்றும் பலரிடமிருந்து நமது அரசியலமைப்பை வடிவமைத்த பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தமானவை" எனப் பதிலளித்துள்ளார்.
தனது அப்பாவுடனான விருப்பமான தருணம் குறித்த கேள்விக்கு, "அவர் ஒரு பைலட். விமானத்தில் அவருடன் செல்வது எனக்கு மகிழ்ச்சியான தருணம்" எனக் கூறினார்.
இதனுடன், நீட் வினாத்தாள் கசிவு, மத்திய அரசின் E20 கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அவர் பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.