

நவம்பர் 18, 2026 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் தர்பங்கா–அமிர்தசரஸ் ஜன்நாயக் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே காவல்துறையினருக்கும், ரயில் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் ஒரு வட மாநில குடும்பதினரும், ஒரு ரயில்வே காவலரும் கடுமையாக தாக்கி கொள்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான ரூபி தேவி “தனது மகளிடம் காவலர் தவறாக நடந்து கொண்டதைத் தட்டிக்கேட்டதாலேயே இந்த வாக்குவாதம் தொடங்கியதாக” குற்றம் சாட்டியுள்ளார். ரயிலில் பயணித்த பயணிகளும், காவலர் தான் முதலில் அவர்களை தாக்கியதாக தெரிவிக்கிறார்கள்.
ரயில்வே காவல்துறை தரப்பில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட இருக்கை தகராறைத் தீர்க்கவே காவலர்கள் தலையிட்டதாகவும், அப்போது பயணிகள் தான் முதலில் காவலர்களைத் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அந்த வீடியோவில் இருப்பதாவது, ஒரு ரயில் பெட்டிக்குள் ரூபி தேவி என்ற வடமாநில பெண்ணுக்கும், ரயில்வே காவலருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுகிறது. பின்னர் காவலர், அந்த பெண்ணின் முகத்தில் மீண்டும் மீண்டும் வேகமாக அறைகிறார். மேலும் அந்த பெண்ணைத் தரையில் தள்ளி கடுமையாக தாக்குகிறார். இதனால் அப்பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வந்துள்ளது. அப்போதும் விடாமல் தாக்குகிறார்.
இதில் பாதிக்கப்பட்ட ரூபி தேவியின் மகள்கள், தனது தாயை பாதுகாக்கும் நோக்கில், அந்தக் காவலரைப் பிடித்து இழுத்துச் செல்ல முயல்கிறார்கள். அப்போது அந்த பெண்களையும் அவர் கடுமையாக தாக்குகிறார். இதில் அவரது சீருடை கிழிந்து, அந்தக் காவலர் கம்பார்ட்மெண்டில் இருந்து வெளியேற முயல்கிறார். ஆனால் அப்பெண்ணின் மகள்கள் காவலரின் சட்டையை பிடித்து அவரை தடுத்து நிறுத்த முயல்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தின் நஜிபாபாத்தில் உள்ள ஜனநாயக் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்ததாக கூறப்படம் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து, அந்த ரயில்பெட்டியில் பயணித்த பயணி ஒருவர் “ஏழை மக்களை பார்க்கும்போது, அதிகாரிகளுக்கு கடமையும் பொறுப்பும் நினைவு வரும்.. பணக்காரர்களையும் அரசியல்வாதிகளையும் பார்த்தால் பயந்து நடுங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் லலித் சாகர் மற்றும் அஜய் குமார் ஆகிய காவலர்கள் அளித்த புகாரின் பேரில் 6 பயணிகள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, அவர்களில் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல் ஆனதை அடுத்து, பெண் பயணியை தாக்கிய காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.