

தலைநகர் டெல்லியில் சில நாட்களாகக் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி, பல பகுதிகளில் காற்று தரக் குறியீடு (AQI) 'மிகவும் மோசமான' நிலைக்குச் சென்றுள்ளது. இந்த அபாயகரமான மாசைக் கட்டுப்படுத்த, டெல்லி அரசு இப்போது 'மேக விதைப்பு' (Cloud Seeding) முறையில் செயற்கை மழையைப் பெய்ய வைக்கத் திட்டமிட்டுள்ளது. வானிலை ஒத்துழைத்தால், இன்று அல்லது இந்த வாரத்தில் முதல் சோதனை ஓட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது.
மேக விதைப்பு என்பது என்னவென்றால், சில்வர் அயோடைடு அல்லது உப்பு போன்ற ரசாயனத் துகள்களை விமானம் மூலமாக மேகங்களுக்குள் செலுத்திக் செயற்கையாக மழையை வரவழைக்கும் அறிவியல் நுட்பம் ஆகும். மேகங்களுக்குள் இந்தத் துகள்கள் செலுத்தப்படும்போது, மேகத்தில் உள்ள சிறிய நீர்த்துளிகள் இவற்றுடன் ஒட்டிக்கொண்டு பெரிய மழைத் துளிகளாக மாறும். பின்னர் அவை மழையாகக் கீழே பெய்யும். இந்தப் பொழியும் மழையானது காற்றில் உள்ள தூசிகள் மற்றும் நச்சுக் காற்றை (Pollutants) அடித்துச் சென்று, தற்காலிகமாகச் சூழ்நிலையைச் சுத்தப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐடி கான்பூர் (IIT Kanpur) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து டெல்லி அரசு இந்தச் சோதனையைச் செய்து வருகிறது. கடந்த வாரமே புரானி பகுதியில் ஒரு சோதனை விமானத்தை வெற்றிகரமாக இயக்கி, சில்வர் அயோடைடு போன்ற ரசாயனக் கலவைகளை மேகங்களுக்குள் செலுத்தும் உபகரணங்கள் சரியாகச் செயல்படுகின்றனவா என்று ஆய்வு செய்தனர். ஆனால், மேகங்களில் தேவையான அளவு ஈரப்பதம் (குறைந்தது ஐம்பது சதவிகிதம்) இல்லாததால், அன்று மழையைப் பெய்ய வைக்க முடியவில்லை.
தற்போதுள்ள வானிலை நிலவரப்படி, இன்று (அக்.20), அத்துடன் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் மேகங்கள் அதிகமாகக் காணப்பட வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் கொடுத்துள்ளது. எனவே, இன்று சூழ்நிலை சாதகமாக இருந்தால், கான்பூரில் இருந்து விமானம் புறப்பட்டு டெல்லிக்கு வரும்.
டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா இதுகுறித்து கூறுகையில், "மேக விதைப்பு சோதனையை இன்று நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு மீட்டிங் (Review Meeting) திட்டமிடப்பட்டுள்ளது. கான்பூரில் விமானம் புறப்படத் தேவையான பார்வைத் தூரம் (Visibility) சுமார் ஐயாயிரம் மீட்டரை (5000 metres) எட்டியவுடன், விமானம் புறப்பட்டு டெல்லிக்கு வரும். அதன் பிறகு மேக விதைப்பு சோதனை நடத்தி, டெல்லியில் செயற்கை மழை பெய்யும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா இந்த முயற்சியை 'வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு' என்று வர்ணித்துள்ளார். இது டெல்லியின் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான அவசியமான மற்றும் புதிய வழிமுறை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களின் ஆசீர்வாதத்துடன் இந்தச் சோதனை வெற்றியடைந்து, எதிர்காலத்தில் மோசமான காற்று மாசுபாட்டிலிருந்து விடுபட ஒரு அறிவியல் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்த உதவுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும், இந்த முயற்சி டெல்லிக்கு ஒரு பெரிய நிவாரணம் கொடுக்கும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.