

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களுக்கு, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு ஆவேசமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இந்த இருபெரும் வீரர்களையும் குறிவைக்கும் விமர்சகர்களை அவர் வெளிப்படையாகவே 'கரப்பான் பூச்சிகள்' என்றும் இந்த விமர்சனங்கள் ஏன் தேவையில்லை என்பதையும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்தத் தொடரில் கேப்டன் ரோஹித் ஷர்மா, இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து, மூன்றாவது போட்டியில் ஒரு சதம் அடித்து அசத்தினார். அதேபோல், முதல் இரண்டு போட்டிகளில் ரன் எடுக்காமல் அவுட்டான விராட் கோலி, மூன்றாவது போட்டியில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிபெற வைத்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், இவர்களை விமர்சிப்பவர்கள் தற்காலிகமாக அமைதியாகினர். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் ஒரு நேரடி உரையாடல் மூலம் அவர்களின் விமர்சகர்களுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
அவர் தனது சமூக ஊடக நேரலையில், "இந்த ஆட்களைப் பற்றி எனக்குப் புரியவில்லை. இவர்களை நான் ஆட்கள் என்று அழைக்கலாமா என்றும் தெரியவில்லை. ஒரு கிரிக்கெட் வீரர் தனது கெரியரின் இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது, கரப்பான் பூச்சிகள் எப்படித் தங்கள் ஓட்டையிலிருந்து வெளியேறுமோ, அப்படி இந்த விமர்சகர்கள் வெளியே வருகிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள்?" என்று மிகவும் ஆத்திரமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "தங்கள் நாட்டிற்காகவும், கிரிக்கெட்டிற்காகவும் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த வீரர்களுக்கு எதிராக ஏன் நீங்கள் எதிர்மறையான எண்ணங்களைப் பரப்ப வேண்டும்? இந்த வீரர்கள் தங்களின் அதிகப்படியான பங்களிப்புக்காகப் பாராட்டப்பட வேண்டிய சரியான நேரம் இதுதான்" என்று அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
கோலியும் ரோஹித்தும் பல வருடங்களாக இந்திய அணிக்காக அளப்பரிய சேவையைச் செய்திருக்கிறார்கள். அப்படியிருந்தும், சிலர் அவர்களைக் கீழே தள்ளுவதற்கு ஏன் முயற்சி செய்கிறார்கள் என்று பார்க்கும்போது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக டி வில்லியர்ஸ் குறிப்பிட்டார். "கடந்த சில மாதங்களாகவே அவர்கள் நிறைய விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்கள். என்ன காரணத்துக்காக என்று தெரியவில்லை, எல்லோரும் அவர்களைக் கீழே தள்ளவே முயற்சிக்கிறார்கள்," என்றும் குறிப்பிட்டுள்ளார்..
மேலும், "பெரும்பாலான மக்கள் ரோஹித் மற்றும் விராட்டின் நம்பமுடியாத கேரியரைப் போற்றுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அந்தக் குழுவைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். இப்போதும் அவர்களைக் கொண்டாட வேண்டிய சரியான நேரம் இது" என்று கூறிய டி வில்லியர்ஸ், ஒரு சிறிய குழு மட்டுமே எதிர்மறையான சிந்தனையைப் பரப்ப முயல்வதைச் சுட்டிக்காட்டினார். மேலும், இது போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்மறையாகப் பேசுவது, அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய ஆதரவுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் அழுத்தமாகக் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.