பெண் எம்.எல்.ஏ-விடம் அநாகரீகமாக நடந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்! - கேரளா அரசியலில் பெரும் பரபரப்பு!

செரியன் பிலிப் மீது காங்கிரஸ் கட்சித் தலைமை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்...
Cherian Philip
Cherian Philip
Published on
Updated on
1 min read

கேரள மாநிலம் கொல்லம் தொகுதியில் வெற்றி பெற்று புதிய எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள பிந்து கிருஷ்ணாவிடம், காங்கிரஸ் மூத்த தலைவர் செரியன் பிலிப் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் பிந்து கிருஷ்ணாவை வரவேற்றபோது, செரியன் பிலிப் அவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிக்க முயன்ற வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் பிந்து கிருஷ்ணா அந்தச் சூழலைத் தவிர்க்க முயல்வதும், அவர் முகத்தில் அசெளகரியம் தெரிவதும் தெளிவாகத் தெரிவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் செரியன் பிலிப்பின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவர் எல்லை மீறியிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஒரு பெண் எம்.எல்.ஏ-வுக்கே இந்த நிலைமையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவதோடு, செரியன் பிலிப் மீது காங்கிரஸ் கட்சித் தலைமை உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளன. காங்கிரஸின் "பெண்களுக்கு எதிரான கலாச்சாரம்" இதுதான் என்று விமர்சித்துள்ள பாஜக பிரமுகர்கள், பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். நாரி சக்தி மற்றும் பெண்களுக்கான அதிகாரம் பற்றிப் பேசும் காங்கிரஸ், தங்கள் கட்சிக்குள்ளேயே இருக்கும் இதுபோன்ற நபர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் அஜய் ஷெராவத் உள்ளிட்டோர் இந்த வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இருப்பினும், இந்தச் சர்ச்சை குறித்து செரியன் பிலிப் அல்லது பிந்து கிருஷ்ணா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கேரள சட்டமன்றத் தேர்தலில் கொல்லம் தொகுதியில் 16,830 வாக்குகள் வித்தியாசத்தில் பிந்து கிருஷ்ணா அபார வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை கேரள சட்டசபையில் மொத்தம் 11 பெண் எம்.எல்.ஏ-க்கள் இடம்பிடித்துள்ள நிலையில், அதில் அதிகப்படியான பெண் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக காங்கிரஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரே பெண் நிர்வாகியிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் காங்கிரஸுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com