

கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம் தொடர்பான வதந்திகள் பரவி வரும் நிலையில், டெல்லியில் அந்த மாநிலத்தின் முக்கியத் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் சுமார் ஆறு மணி நேரம் நீண்ட ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த சந்திப்பு முழுக்க முழுக்க கர்நாடகாவில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை முன்னிட்டு மட்டுமே நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். முதலமைச்சர் பதவி மாற்றம் குறித்த ஊகங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், இது போன்ற தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜ்யசபா மற்றும் மேலவைத் தேர்தல்கள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாகவும், மற்றபடி எந்த ஒரு பதவி மாற்றமோ அல்லது அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பேச்சுகளோ இடம் பெறவில்லை என்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான சர்ச்சை கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. 2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று மேலிடம் வாக்குறுதி அளித்ததாக டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.க தரப்பிலிருந்து அழுத்தம் அதிகரித்துள்ள சூழலில், இந்த சிக்கலுக்கு டெல்லி மீட்டிங்கில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
80 வயதான தற்போதைய முதல்வர் சித்தராமையாவின் நிர்வாகத் திறனில் சில விமர்சனங்கள் இருந்தாலும், அவரை மாற்ற காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அவர் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் மத்தியில் வைத்திருக்கும் வலுவான ஆதரவுதான். இந்த ஆதரவுதான் 2023 தேர்தலில் வொக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களின் செல்வாக்கைத் தாண்டி காங்கிரஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தது. இதனால் தற்போதைய சூழலில் எந்த மாற்றமும் தேவையில்லை என்ற முடிவிலேயே காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.
குறிப்பாக, அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடந்த சூழலில், கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்தால் ஏற்படும் குழப்பம் அந்தத் தேர்தலைப் பாதிக்கும் என்று காங்கிரஸ் அஞ்சியது. இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால், டி.கே. சிவகுமார் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். 64 வயதான துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில காங்கிரஸ் தலைவராகவும் ஒரே நேரத்தில் பொறுப்பு வகித்து வருவது, கட்சிக்குள் அவரது செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.