

சமூக ஊடகம் மூலம் பழக்கமான உள்ளூர் இஸ்லாமியர் ஒருவரை, இஸ்லாம் மதத்திற்கு மாறித் திருமணம் செய்துகொண்ட இந்தியச் சீக்கியப் பெண்மணியைத் துன்புறுத்துவதை நிறுத்தும்படி பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று (நவ.18) போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
48 வயதான சரப்ஜீத் கவுர், குரு நானக்கின் பிறந்தநாள் விழா தொடர்பான கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்த மாதம் தொடக்கத்தில் வாகா எல்லை வழியாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் நுழைந்த சுமார் 2,000 சீக்கியப் பக்தர்களில் ஒருவராக இருந்தார். அந்தப் பக்தர்கள் நவம்பர் 13 அன்று நாடு திரும்பினர், ஆனால் கவுர் காணாமல் போனது தெரியவந்தது.
கவுர் பாகிஸ்தானுக்கு நவம்பர் 4 அன்று வந்த ஒரு நாள் கழித்து, லாகூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள ஷேகுபுரா மாவட்டத்தைச் சேர்ந்த நாசிர் ஹுசைன் என்பவரைக் கவுர் திருமணம் செய்து கொண்டதாக லாகூரில் உள்ள ஒரு மூத்த போலீஸ் அதிகாரி பின்னர் தெரிவித்தார்.
பக்தர்கள் அதே நாளில் நன்கானா சாஹிப்பிற்குச் சென்றபோது, கவுர் அந்த நிகழ்ச்சியைத் தவிர்த்துவிட்டு, ஹுசைனுடன் ஷேகுபுராவை அடைந்தார்.
செவ்வாய்க்கிழமை அன்று, கவுரும் ஹுசைனும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ஷேகுபுராவின் ஃபரூகாபாத்தில் உள்ள அவர்களது வீட்டில் போலீஸ் சட்டவிரோதமான முறையில் சோதனை நடத்தியதாகவும், திருமணத்தை முறித்துக் கொள்ளும்படித் தங்களை வற்புறுத்தியதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஃபாரூக் ஹைதர், மனுதாரர்களைத் துன்புறுத்துவதை நிறுத்தும்படிப் போலீஸாருக்கு உத்தரவிட்டார். கவுர் தனது மனுவில், ஒரு போலீஸ் அதிகாரி தம்பதியினரைத் தேவையில்லாமல் துன்புறுத்தியதாகவும், திருமணத்தை ரத்து செய்யும்படி வற்புறுத்தியதாகவும் கூறினார்.
தமது கணவர் பாகிஸ்தான் குடிமகன் என்றும், தனது விசாவை நீட்டிக்கவும், பாகிஸ்தான் குடியுரிமையைப் பெறவும் இந்தியத் தூதரகத்தை அணுகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ கிளிப்பில், தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஹுசைனை முகநூல் வழியாக அறிந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
"நான் விவாகரத்து பெற்றவள் (Divorcee), ஹுசைனைத் திருமணம் செய்ய விரும்பினேன்; அதற்காகவே இங்கு வந்தேன்," என்று அவர் கூறினார். மேலும், தன்னையும் தன் கணவரையும் போலீஸாரும், தெரியாத நபர்களும் துன்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். நிக்காஹ் திருமணச் சடங்குக்கு முன் கவுருக்கு 'நூர்' என்ற இஸ்லாமியப் பெயர் வழங்கப்பட்டது. "நான் மகிழ்ச்சியாக ஹுசைனைத் திருமணம் செய்து கொண்டேன்," என்றும் அவர் மேலும் கூறினார். கவுர் இந்தியாவில் உள்ள கபூர்தலா மாவட்டத்தின் அமனிபூர் கிராமத்தைச் சொந்தமாக கொண்டவர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், அவர் காணாமல் போனது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கவுரின் கணவர் கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்தார் என்று செய்தி வெளியானது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.