அம்பானி, அதானியை விஞ்சிய தமிழர்.. 5 ஆண்டுகள் தொடர்ந்து முன்னிலை.. கோடிகளை அள்ளி வழங்கிய சிவ நாடார் குடும்பம்!

சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.7.1 கோடி என்ற அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.
Tamil Philanthropist Tops List for 5 Straight Years as Shiv Nadar Family Beats Ambani, Adani
அம்பானி, அதானியை விஞ்சிய தமிழர்.. 5 ஆண்டுகள் தொடர்ந்து முன்னிலை.. கோடிகளை அள்ளி வழங்கிய சிவ நாடார் குடும்பம்!
Published on: 
Updated on: 
1 min read

இந்தியாவின் பணக்காரர்கள் மருத்துவம், கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளுக்கு அளிக்கும் நன்கொடை இந்த ஆண்டு வழக்கத்தைவிட 11% உயர்ந்துள்ளது. 2026 நிதியாண்டில் மொத்தம் ரூ.11,554 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இதில் சிவ நாடார் குடும்பம் மட்டும் ரூ.2,593 கோடி வழங்கியுள்ளது. இது மொத்த நன்கொடைத் தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்காகும். இவர்களது நன்கொடையில் சரிபாதி கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த நற்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஹுரூன் இந்தியா அறக்கொடைப் பட்டியல், ரூ.5 கோடி அல்லது அதற்கு மேல் நன்கொடை வழங்குபவர்களைக் கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 81 வயதாகும் சிவ நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.7.1 கோடி என்ற அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஆண்டைவிட நன்கொடையை இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.877 கோடி வழங்கியுள்ளனர். இதனால், ஐந்தாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.

மூன்றாவது இடத்தில் பஜாஜ் குடும்பத்தினர் நீடிக்கின்றனர். அவர்கள் ரூ.632 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.620 கோடி நன்கொடை வழங்கி அடுத்த இடத்தில் உள்ளனர்.

இந்த நன்கொடையாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை 24-ல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது. நந்தன் நிலேகனியின் மனைவியான 67 வயதான ரோகிணி நிலேகனி, ரூ.215 கோடி நன்கொடை அளித்து, இந்தப் பட்டியலில் அதிக நன்கொடை வழங்கிய பெண்ணாக உள்ளார்.

மொத்த நன்கொடைத் தொகையில் 57 சதவீதம், அதாவது ரூ.6,572 கோடி, முதல் 10 நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

பணக்காரர்களின் நன்கொடை பெருமளவில் கல்வித் துறையை நோக்கியே இருந்துள்ளது. மொத்த நன்கொடைத் தொகையில் 36 சதவீதம், அதாவது ரூ.4,188 கோடி, கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 200 நன்கொடையாளர்கள் கல்விக்காக நிதி வழங்கியுள்ளனர். மருத்துவம் தொடர்பான நற்பணிகளுக்கு ரூ.1,768 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கு வழங்கப்பட்ட ரூ.1,377 கோடி நிதியில், சிவ நாடார் குடும்பத்தினர் மட்டும் ரூ.1,220 கோடி பங்களித்துள்ளனர்.

இந்த அறிக்கை கடந்த 13 ஆண்டுகளாக வெளியாகி வருகிறது. 2014-ம் ஆண்டு வெறும் 50 ஆக இருந்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 219 ஆக உயர்ந்துள்ளது.

Tamil Philanthropist Tops List for 5 Straight Years as Shiv Nadar Family Beats Ambani, Adani
``தவெக முடிவால் ரூ.2000 கோடி இழப்பு.. நடவடிக்கை எடுப்பீர்களா CM சார்?" - அப்பாவு கேட்ட கிடுக்குப்பிடி கேள்வி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.