தெலங்கானா தேசிய நெடுஞ்சாலையில்.. ஜல்லிக் கல் மூட்டைக்குள் சிக்கி துடிதுடித்த மக்கள்! - பத்து மாதக் குழந்தையுடன் இருபது பேர் பலி! - நெஞ்சை உலுக்கும் விபத்து!

இந்தக் கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களில் பத்து மாதக் குழந்தை ஒன்றும், பத்து பெண்களும் அடங்குவர்.
தெலங்கானா தேசிய நெடுஞ்சாலையில்.. ஜல்லிக் கல் மூட்டைக்குள் சிக்கி துடிதுடித்த மக்கள்! - பத்து மாதக் குழந்தையுடன் இருபது பேர் பலி! - நெஞ்சை உலுக்கும் விபத்து!
Published on
Updated on
2 min read

இன்று காலை ஹைதராபாத்-பிஜாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில், பயணிகள் பேருந்து ஒன்று கற்கள் ஏற்றி வந்த ஒரு லாரியின் மீது மோதியதில், சுமார் இருபது பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம், ஹைதராபாத்தில் இருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகத்துக்குச் (TSRTC) சொந்தமான அந்தப் பேருந்தில், விபத்து நடந்தபோது சுமார் எழுபது பயணிகள் பயணம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேருந்து, விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தாண்டூரில் இருந்து ஹைதராபாத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டுமானப் பொருட்களான ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த லாரியுடன் மோதியது. மோதிய வேகத்தில், லாரியில் இருந்த ஜல்லிக் கற்கள் அனைத்தும் பேருந்துக்குள் சரிந்து விழுந்து, பல பயணிகளை அப்படியே மூடி புதைத்தன.

இந்தக் கொடூர விபத்தில் உயிரிழந்தவர்களில் பத்து மாதக் குழந்தை ஒன்றும், பத்து பெண்களும் அடங்குவர். அத்துடன், இந்த இரண்டு பெரிய வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பல பயணிகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்து நடந்த இடத்தில் நிலவிய காட்சிகள் இதயத்தை நொறுக்குவதாக இருந்தன. ஜல்லிக் கல் மூட்டைக்குள் சிக்கிக் கொண்டவர்கள் உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டுள்ளது. காயமடைந்தவர்களை வெளியே இழுப்பதற்கும், மீட்பதற்கும் காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் மிகுந்த சிரமப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்க, மீட்புக் குழுவினர் பேருந்தின் சில பாகங்களை வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.

இந்த விபத்தில், ஓட்டுநர் இருக்கையும், அதற்குப் பின்னால் இருந்த ஆறு வரிசை இருக்கைகளும் மிக மோசமாகச் சிதைந்தன. பேருந்தின் இந்தப் பகுதியில் அமர்ந்திருந்த பெரும்பாலான பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

-

இந்தச் சாலை விபத்து குறித்துத் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக அதிகாரிகளைச் சம்பவ இடத்துக்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிகளைச் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம்அவர்கள், சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநரான ஒய். நாகிரெட்டியுடன் தொலைபேசியில் பேசி, விபத்துக்கான காரணங்கள் குறித்துக் கேட்டறிந்துள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்குச் சரியான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும்படி ரங்காரெட்டி மாவட்ட ஆட்சியருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தெலங்கானாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஆர்எஸ்-ஸின் செயல் தலைவரான கே.டி. ராமராவ், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உடனடியாக உதவிகளையும், நிவாரணத்தையும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரமான விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com