அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், கணவருடன் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 31 வயது பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம், மரிபேடா மண்டலத்தைச் சேர்ந்த தரம் ஸ்ரீனிவாஸ் ராவின் மகள் 31 வயதுடைய சுப்ரியா. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மென்பொருள் துறையில் பணிபுரியும் கொடுமுரி ரஞ்சித்தை திருமணம் செய்துகொண்ட சுப்ரியா, கணவருடன் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பகுதியில் வசித்து வந்தார். இந்த தம்பதியருக்கு 3 வயதுக்குட்பட்ட மகன் உள்ளார்.
அமெரிக்காவில் சுப்ரியா உணவகம் ஒன்றை நடத்தி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த (அக் 5) ஆம் தேதி அதிகாலை உணவகத்தை மூடிவிட்டு, தனது இந்தியத் தோழியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் பயணித்த காரின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியதாக கூறப்படுகிறது. அதிகாலை சுமார் 2.20 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரி மோதியதில் கார் கடுமையாக சேதமடைந்த நிலையில், சுப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், அவருடன் காரில் பயணம் செய்த தோழி பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்ட சுப்பிரியாவின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தெலங்கானாவில் உள்ள சுப்ரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வெளிநாட்டில் மகள் உயிரிழந்த செய்தி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சுப்ரியாவின் உடலை அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து, குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என அவரது தந்தை தரம் ஸ்ரீனிவாஸ் தெலுங்கானா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக மாநில அரசின் உதவியை நாடி முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டிக்கும் கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சுப்ரியாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மற்றும் விபத்து தொடர்பான முறையான தகவல்களுக்காக குடும்பத்தினர் அமெரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த இளம் பெண், உணவகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தெலங்கானாவில் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்