

டெல்லி, ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு இளைஞர் அரசியல் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜந்தர் மந்தரில் கூடியுள்ளனர்.
அக்டோபர் 3-ம் தேதி போராட்டத்தின்போது, பெண் செய்தியாளர்கள் மூவருக்குக் காவல்துறையினர் பாலியல் தொல்லை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், “நான் காவல்துறையினரின் நடவடிக்கையைப் படம் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது உதவி ஆணையர் (ஏசிபி) அந்தஸ்தில் உள்ள காவல்துறை அதிகாரி ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை அளித்தார். அந்த அதிகாரி தவறான முறையில் நடந்து கொண்டார்.
என்னிடமிருந்து எதிர்ப்பு எழுந்தபோது என்னைத் தள்ளிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உடனடியாகக் காவல் நிலையம் சென்றோம். ஆனால் எங்கள் புகாரைப் பதிவு செய்யக் காவல்துறை தாமதித்தது” எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் விளக்கமளித்த டெல்லி காவல்துறை, “செய்தியாளரின் புகார் பெறப்பட்டது. நியாயமான விசாரணைக்காகக் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தைப் போராட்டக்காரர்கள் கையில் எடுத்து, டெல்லி காவல்துறையினருக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் வலியுறுத்தி, இன்று (அக். 5) நாடாளுமன்ற வீதி (பார்லிமென்ட் ஸ்ட்ரீட்) காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். .
போராட்டக்காரர்கள் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவ இடத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரினர். அப்போது போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டக்காரர்கள் மட்டுமல்லாமல், காவலர் மீது பாலியல் புகார் அளித்த பெண் பத்திரிகையாளரையும் இன்று கைது செய்துள்ளனர். கடந்த 3ம் தேதி செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது, உதவி ஆணையர் (ACP) விவேக் பகத் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அராஜகமாக நடந்துகொண்டதாகவும் அந்தப் பெண் புகார் அளித்திருந்தார். அவர் இன்று காலையில் மீண்டும் கைது செய்யப்பட்டு டெல்லி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விவேக் பகத் மீது FIR போடப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் இந்தப் பெண் நேற்றும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) சட்ட விவகாரங்கள் தலைவர் ரத்னா சிங், 'எக்ஸ்' (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகவும், கொடூரமாக அடித்து உதைக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
“தங்கள் தரப்பினரைப் பாதுகாப்பதற்காக, காவல்துறை இப்போது பாதிக்கப்பட்ட பெண்ணையும், குற்றவாளி மீது நடவடிக்கை கோருபவர்களையும் அடித்து உதைக்கிறது” என அவர் எழுதியுள்ளார்.
இவ்வழக்கில் டெல்லி காவல்துறை இதுவரை FIR பதிவு செய்யவில்லை. இதுகுறித்து டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டதுடன், இதுபோன்ற பணிகளின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகக் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால், அது அவர்களின் “பணிச் செயல்பாட்டை முடக்கும்” என்று கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்