“ஒரே மணமகனை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள்” - ரீல்ஸ் எடுக்கும் கேமராமேனுடன் காதல்! சட்டம் என்ன சொல்கிறது?

அது சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா என்பது தனித்தனி விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே
Three sisters married the one man
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அம்ரோஹா மாவட்டத்தில், இரண்டு சகோதரிகள் மற்றும் உறவுப் பெண்ணும் ஒரே இளைஞரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணத்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அது சட்டப்படி செல்லுபடியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையும் தகவல்களை சேகரித்து வருகிறது. அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் உள்ள தத்தூரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரோஜ் (20), அவரது சகோதரி சாவித்ரி ராணி (19) மற்றும் அவர்களது உறவுப் பெண் சந்தோஷ் கடக்வன்ஷி (18). இவர்கள் மூவரும் சமூக வலைதளங்களில் ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து வருபவர்கள். சரோஜ் தற்போது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மூவரது வீடியோக்களை கடந்த ஆறு மாதங்களாக அருகிலுள்ள ஷ்யாம்புரி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான விகாஸ் கடக்வன்ஷி என்ற இளைஞர் ஒளிப்பதிவு செய்து வந்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட பல வீடியோக்களில், விகாஸ் இவர்களுக்கு கணவராக நடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் நால்வருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அம்ரோஹா பகுதியில் உள்ள சாமுண்டா மாதா கோவிலில் நால்வரும் திருமணச் சடங்குகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்தக் காட்சிகளில், விகாஸ் மூன்று பெண்களின் நெற்றியிலும் குங்குமம் வைத்து திருமணச் சடங்கு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் அதைப் பகிர்ந்ததால், சம்பவம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது.

காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த திருமண நிகழ்வில் இரு தரப்பு குடும்பத்தினரும் பங்கேற்கவில்லை. குடும்ப உறுப்பினர்களின் முன்னிலை இன்றி கோவிலில் சடங்குகள் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை யாரும் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திருமணம் குறித்து பேசிய சரோஜ், "நாங்கள் மூவரும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தினர் எங்களை தனித்தனியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். திருமணத்திற்குப் பிறகு மூவரும் வெவ்வேறு வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும் என்பதை நினைத்து மிகவும் கவலை அடைந்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாது என்பதால், ஒரே நபரை திருமணம் செய்துகொள்வது என்ற முடிவை எடுத்தோம்," என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், நான்கு பேரும் பரஸ்பர சம்மதத்துடனேயே இந்த திருமணத்தை நடத்திக் கொண்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Vikas Khadakvanshi

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர், "இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைத் தேர்வு" என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். மற்றொரு தரப்பினர், இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்து திருமணச் சட்டத்தின்படி, முதல் திருமணம் செல்லுபடியாக இருக்கும் நிலையில் மற்றொரு திருமணம் பொதுவாக சட்ட அங்கீகாரம் பெறாது என்பதால், இந்த திருமணத்தின் சட்டப்பூர்வ நிலை என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சட்ட நிபுணர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். திருமணச் சடங்கு நடைபெற்றிருந்தாலும், அது சட்ட ரீதியாக செல்லுபடியாகுமா என்பது தனித்தனி விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவால் தொடங்கிய இந்த சம்பவம், தற்போது உத்தரப் பிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. குடும்ப உறவுகள், தனிநபர் சுதந்திரம், சமூக மரபுகள் மற்றும் திருமணச் சட்டங்கள் குறித்து மீண்டும் ஒரு முறை பரவலான விவாதத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com