“அம்மா வலிக்குது.. நான் போறேன்” - கணவரின் கொடுமை தாங்காமல் மனைவி விபரீதம் முடிவு.. வெளியான கடைசி வீடியோவால் பரபரப்பு!

தற்கொலைக்கு முன்பாக ஷாலினி தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதை தனது உறவினர்கள்...
sridevi with her husband
sridevi with her husband
Published on
Updated on
2 min read

சென்னை பூந்தமல்லியில், கணவர் தாக்கியதாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின் (36). இவரது மனைவி ஷாலினி (33). இருவரும் தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்தனர். காதலித்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், நேற்று குழந்தையை ஷாலினி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வின், "குழந்தையை ஏன் அடிக்கிறாய்?" என்று கேட்டு மனைவி ஷாலினியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய செல்வின், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் சாலினி தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக பூந்தமல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை தொடங்கினர். விசாரணையில், தற்கொலைக்கு முன்பாக ஷாலினி தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. அந்த வீடியோவில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், "அவரை சும்மா விடாதீர்கள் பிளீஸ்.. நான் போறேன்.. அம்மா வலிக்குது.. என்ன பிரிஞ்சி வாழவும் யாரும் விடமாட்டேங்கிறீங்க.. நானே சாகணும்னு தான் அவன் என்னை கொடுமை படுத்துறான்" என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு போலீசார் செல்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கு குடும்ப வன்முறையே காரணமா, அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்டு எட்டு ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த தம்பதியரின் வாழ்க்கை, குடும்பத் தகராறால் சோகத்தில் முடிந்த சம்பவம் பூந்தமல்லி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com