மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். NEET-UG 2026 தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் நடத்திய தீவிர போராட்டத்திற்குப் பின் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த மே 3 அன்று நடைபெற்ற NEET-UG தேர்வில் பல இடங்களில் பேப்பர் லீக், முறைகேடு, மதிப்பெண் கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும் இளைஞர் அமைப்பாக உருவாகியுள்ள புதிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும் போராட்டத்தை நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர்கள் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர்."மாணவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்", "NEET ரத்து செய்" போன்ற கோஷங்களுடன் இளைஞர்கள் தங்கள் குரலை உயர்த்தினர். சமூக வலைதளங்களில் #JusticeForNEETStudents என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பல மாணவர்கள் உண்ணாவிரதம், பேரணி உள்ளிட்டவற்றின் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 25, 2026) தர்மேந்திர பிரதான் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களுடன் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்டார். அதில், "கடந்த 10 நாட்களின் நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளன. இளைஞர் சக்தியை தவறான பாதையில் செல்ல விட மாட்டேன்" என்று கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.இந்த ராஜினாமா முடிவை மாணவர்கள் வரவேற்றுள்ளனர். "இது எங்கள் போராட்டத்தின் வெற்றி. முறைகேடுகளுக்கு எதிரான எங்கள் குரல் கேட்கப்பட்டது" என்கின்றனர் மாணவர் அமைப்புகள்.
எதிர்க்கட்சிகள் இதை "மோடி அரசின் கல்விக் கொள்கையின் தோல்வி" என்று விமர்சித்துள்ளன.இப்போது அடுத்த கல்வி அமைச்சர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. NEET தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் வருமா என்பதும் மாணவர்கள் உற்று நோக்கும் விஷயமாக உள்ளது.மாணவர்களின் ஒருங்கிணைந்த போராட்டமும், உறுதியும் ஒரு அமைச்சரின் ராஜினாமாவுக்கு வழிவகுத்துள்ள இந்த சம்பவம், இந்திய அரசியலில் இளைஞர்களின் சக்தியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.