குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..! களைகட்டிய விஜயதசமி கொண்டாட்டம்..!

குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..! களைகட்டிய விஜயதசமி கொண்டாட்டம்..!
Published on
Updated on
2 min read

நவராத்திரியின் நிறைவு நாளான இன்று, தமிழகம் முழுவதும் விஜயதசமி விழா உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கோயில்கள் மற்றும் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவராத்திரி பண்டிகை:

நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்து மக்கள் வழிபட்டனர். ஒன்பதாம் நாளான நேற்றைய தினம், ஆயுத பூஜை விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

ஆயுத பூஜை:

ஏராளமானோர் தங்களின் வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதி தேவிக்கு தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். மேலும், கல்வி மற்றும் தொழிலுக்கு உதவும் புத்தகங்கள், கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சந்தனம், குங்குமமிட்டு ஆயுத பூஜையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

விஜயதசமி:

நவராத்திரியின் பத்தாம் நாள் மற்றும் நிறைவு நாளான இன்று விஜயதசமி விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகள், தொழில்கள் என எது தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குறிப்பாக கல்விக்கு உகந்த நாளான இன்று கல்வியை தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது பெற்றோர்களின் அதீத நம்பிக்கை. 

வித்யாரம்பம்:

மழலைக் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுத்து எழுத்தறிவை தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு கோயில்கள் மற்றும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பள்ளிகளில் சேர்க்கை:

மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்டவையும் இன்று நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியராவது கட்டாயம் இன்று பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com