

பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு படங்களை செய்யவில்லை என்றால் அதற்கு ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பது இயல்பு தான், காரணம் மீண்டும் அதே போல மாணவர்கள் செய்ய கூடாது என்பதற்காக, அது போல சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி சிறுவன் ஒருவருக்கு ஆசிரியர்கள் வீட்டு பாடம் எழுதாமல் வந்ததால் கொடுத்த தண்டனை சமூக வலைத்தளங்களில் பரவி பேசு பொருளாகவும் தண்டனைக்குரிய செயலாகவும் மாறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டத்தில் வாஹினி வித்யா மந்திர் என்ற பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பயின்று வரும் 5 வயது சிறுவன் வீட்டு பாடம் எழுதாமல் வந்ததால் காஜல் சாஹி மற்றும் அனுராதா தேவாங்கன் என்ற இரண்டு ஆசிரியர்கள் சிறுவனை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் கயிற்றில் கட்டி சுமார் இரண்டு மணி நேரம் மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த வாலிபர் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து இதை பார்த்த அந்த மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை தொடங்கினர்.
பின்னர் நேரடியாக பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு ஆசிரியர்கள் ஒருவர் “நாங்கள் செய்தது தவறுதான் எங்களை மன்னித்து விடுங்கள்” என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு இரண்டு ஆசிரியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் சந்தித்த அதிகாரிகள் மாணவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இருப்பினும் இந்த வீடியோவை பார்த்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதனை கண்டிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.