வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாநிலங்களவையிலும் வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட INDIA கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தின் இறுதியில், நள்ளிரவு 2 மணியளவில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 119 போதும். ஏனென்றால் அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆகும். இதனிடையே, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பிறகு வக்பு மசோதா சட்ட வடிவம் பெறும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்