

மகாராஷ்டிர அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் புதிய துணை முதல்வராகப் பதவியேற்க உள்ள சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன. தனது அண்ணன் மகனான அஜித் பவாரின் திடீர் மரணம் மகாராஷ்டிராவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று வேதனையுடன் தெரிவித்துள்ள சரத் பவார், சுனேத்ரா பவாரின் நியமனம் குறித்துப் பல முக்கிய உண்மைகளை உடைத்துள்ளார்.
பாராமதியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், சுனேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ள தகவல் தனக்கு ஊடகங்கள் வாயிலாகவே தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அஜித் பவாரின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப அவரது கட்சி எடுத்த முடிவு இது என்றும், இதில் தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எந்தப் பங்கும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, சுனேத்ரா பவாரின் பதவியேற்பு விழா குறித்த ஆலோசனைகள் எதுவும் தன்னிடம் நடத்தப்படவில்லை என்றும், பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரே இந்த முடிவுகளை முன்னின்று எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அஜித் பவாரின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் மற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கும் சரத் பவார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்கள் இந்த விமான விபத்தில் சதி இருக்கலாம் என்று கூறி உச்ச நீதிமன்ற விசாரணை கோரிய நிலையில், சரத் பவார் அதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். "அஜித்தின் மரணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து மட்டுமே; இதில் எந்த அரசியலும் இல்லை, சதித்திட்டமும் இல்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். துயரமான இந்தச் சூழலில் அரசியலைக் கொண்டு வர வேண்டாம் என்று அவர் மற்ற தலைவர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், அஜித் பவாரின் கடைசி ஆசை குறித்து ஒரு நெகிழ்ச்சியான தகவலையும் சரத் பவார் பகிர்ந்துள்ளார். பிரிந்து கிடக்கும் தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளையும் ஒன்றிணைக்க அஜித் பவார் விரும்பியதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கி பிப்ரவரி 12 ஆம் தேதி இணைப்பு நடைபெறவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அந்த நன்நாள் வருவதற்கு முன்பே விதி அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். அஜித்தின் கனவை நனவாக்கும் வகையில் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது குறித்து வரும் நாட்களில் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் மறைமுகமாகச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
சுனேத்ரா பவாரின் பதவியேற்பு விழாவில் பவார் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற தகவலையும் சரத் பவார் உறுதி செய்துள்ளார். குடும்ப ரீதியாக ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், அரசியல் முடிவுகள் என்பது அந்தந்த கட்சிகளின் தனிப்பட்ட விருப்பம் என்று அவர் கூறியுள்ளார். அஜித் பவார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர யாராவது ஒரு பொறுப்பான நபர் வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று குறிப்பிட்ட அவர், புதிய தலைமுறை அஜித்தின் பாதையில் மக்களைக் காக்கும் என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.