இந்தியக் கடற்படையும், டிஆர்டிஓ (DRDO) அமைப்பும் இணைந்து ஒடிசா கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான சாதனையைப் படைத்துள்ளன. கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 29), ஹெலிகாப்டரில் இருந்து ஏவப்படக்கூடிய குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை (NASM-SR) வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளனர். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஹெலிகாப்டரில் இருந்து அடுத்தடுத்து இரண்டு ஏவுகணைகளைச் சீறிப்பாய விட்டு 'சால்வோ டெஸ்ட்' (Salvo Test) எனும் இரட்டைத் தாக்குதல் முறையை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள், வரும் காலங்களில் கடற்படை ஹெலிகாப்டர்களில் முக்கிய ஆயுதமாக இடம்பெறப் போகின்றன.
கடல் போரில் நம்முடைய கப்பல்கள் எதிரியின் நேரடி பார்வைக்குச் செல்லாமலேயே, ஹெலிகாப்டர்களை அனுப்பித் தாக்குவது ஒரு சிறந்த தற்காப்பு முறையாகும். இதற்காக ஏற்கனவே 'சீ ஈகிள்' (Sea Eagle) எனும் பிரிட்டிஷ் வகை ஏவுகணைகளை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் அவை 1980-களின் பழைய மாடல் மற்றும் அதன் எடை மிக அதிகம். ஒரு ஏவுகணையே சுமார் 580 கிலோ இருக்கும். இதனால் ஹெலிகாப்டரில் அதிக ஏவுகணைகளை ஏற்றிச் செல்ல முடியாது. இதற்குத் தீர்வாகத்தான் டிஆர்டிஓ இந்த புதிய ஏவுகணையை உருவாக்கியுள்ளது. இதன் எடை வெறும் 380 கிலோ தான். அதாவது பழையதை விட 200 கிலோ குறைவு என்பதால், ஒரே ஹெலிகாப்டரில் அதிக ஏவுகணைகளை எடுத்துச் செல்ல முடியும்.
இந்த ஏவுகணையில் இரண்டு "பக்கா" டெக்னாலஜிகள் உள்ளன. ஒன்று 'மேன்-இன்-லூப்' (Man-in-loop). பொதுவாக ஏவுகணையை ஏவிவிட்டால் அது பாட்டுக்குத் தானாகப் போகும். ஆனால் இதில் ஏவப்பட்ட பிறகும், ஹெலிகாப்டரில் அமர்ந்திருக்கும் வீரர் அதன் பாதையை மாற்ற முடியும். கடலில் தவறுதலாகப் பொதுமக்களின் கப்பல் குறுக்கே வந்தால், ஏவுகணையைத் திசை திருப்பி விபத்தைத் தவிர்க்கலாம். இது ஒரு ரிமோட் கண்ட்ரோல் கார் போலச் செயல்படும். இதற்காக ஒரு அதிநவீன தகவல் தொடர்பு வசதி இந்த ஏவுகணையில் உள்ளது.
அடுத்த முக்கியமான வசதி 'வாட்டர்லைன் ஹிட்' (Waterline Hit). ஒரு கப்பலை மேலோட்டமாகத் தாக்குவதை விட, அந்தக் கப்பல் தண்ணீரில் மிதக்கும் அந்தப் பகுதியை (கப்பலின் அடிப்பகுதி) குறிவைத்துத் தாக்கினால், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து மிக வேகமாக மூழ்கிவிடும். இந்த ஏவுகணை சரியாகக் கப்பலின் அந்தப் பலவீனமான இடத்தைக் குறிவைத்துத் தாக்கும் வல்லமை கொண்டது. இது எதிரி கப்பல்களைச் செயலற்றதாக மாற்ற அல்லது அப்படியே கடலுக்குள் அனுப்பப் போதுமானதாகும்.
இந்த ஏவுகணை சுமார் 55 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும். இதில் உள்ள சென்சார்கள் மற்றும் ரேடியோ கருவிகள் கடல் மட்டத்திலிருந்து மிகத் தாழ்வாகப் பறந்து சென்று, எதிரியின் ரேடாரில் சிக்காமல் தாக்குதல் நடத்த உதவும். கடந்த புதன்கிழமை நடந்த சோதனையில், ஒரே ஹெலிகாப்டரில் இருந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை ஏவியதன் மூலம், எதிரி கப்பல்களின் தற்காப்பு வளையத்தை உடைத்துத் தாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையை இந்தியக் கடற்படை மட்டுமின்றி இந்திய விமானப் படை அதிகாரிகளும் நேரில் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்த ஏவுகணை வரும் காலங்களில் கடற்படை ஹெலிகாப்டர்களில் மட்டுமல்லாது, விமானப் படையின் ஹெலிகாப்டர்களிலும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே, தனியார் நிறுவனங்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, இந்திய ராணுவத்தின் தற்சார்பு முயற்சிக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்