

உலகிலேயே மக்களிடையே அதிக பொருளாதார ஏற்றத்தாழ்வு (Economic Inequality) உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா.
உலக ஏற்றத்தாழ்வு அறிக்கை (World Inequality Report) மற்றும் ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கைகளின்படி, இந்தியாவின் மொத்த செல்வத்தில் 60%-க்கும் அதிகமான பங்கு வெறும் 10% மேல்தட்டு மக்களிடமே உள்ளது. தற்போதைய World Inequality Report 2026 தரவின்படி, இந்தியாவின் மொத்த செல்வத்தில் சுமார் 65% மேல் 10% மக்களிடம் உள்ளது.
இந்த 10% பணக்காரர்களில் (UHNIs - Ultra High Net Worth Individuals) பலரும் வெளிநாடுகளில் சொத்துகளைக் குவிப்பதில் ஆர்வம் காட்டுவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது வெறும் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ அல்லது தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்க வைப்பதற்கோ மட்டுமே செய்யப்படுவது அல்ல.
வெளிநாட்டு குடியுரிமையையும், வாசிப்பதற்கான அனுமதியையும் பெறுவது, தங்களது பல தலைமுறைச் சொத்துகளையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு நீண்டகால உத்தியாகவே (Wealth Strategy) தொடங்கியிருக்கின்றனர்.
சில செல்வந்த குடும்பங்களின் நோக்கம் மிகவும் எளிமையானது. தங்களது சந்ததியினரின் வாழ்க்கை, கல்வி, மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளை எளிமையாக்குவதற்கு பணக்கார நாடுகள் நல்ல தேர்வாக உள்ளன.
இன்னும் சிலர் தங்களது ஓய்வு காலத்தை அமைதியாகக் கழிப்பதற்காக இப்போதே வேறு ஒரு நாட்டில் அடித்தளம் அமைக்கிறார்கள்.
தொழிலதிபர்களோ, உள்நாட்டில் அல்லது சர்வதேச அளவில் அரசியல் அல்லது கோவிட் போன்ற காரணிகளால் வணிகச் சூழல் மாறும்போது உடனடியாக வேறு இடத்திற்கு மாறக்கூடிய பிளான் பி இருப்பதை விரும்புவதாகத் தெரிவிக்கிறார்கள்.
வெளிநாட்டு முதலீட்டு அடிப்படையிலான குடியேற்ற ஆலோசனைகளை வழங்கும் ‘MyRCBI’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான தனஞ்ஜய்சின் சுடாசமா (Dhananjaysinh Chudasama) இதுகுறித்துப் பேசுகையில், "இன்றைய சூழலில் வெளிநாட்டுக் குடியுரிமை முதலீடு என்பது கல்வி அல்லது தொழில் விரிவாக்கத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல.
எதிர்பாராத உலகளாவிய மாற்றங்கள், அரசியல் சூழல் அல்லது வரி விதிப்பில் மாற்றங்கள் நிகழும்போது தொழிலில் பின்னடைவை சந்திக்க நேரிடலாம். அந்த நேரத்தில் தங்களுக்கு எல்லையற்ற சுதந்திரத்தையும், அடுத்த தலைமுறைக்கான சர்வதேச வாய்ப்புகளையும், உடனடியாகப் வழங்கும் ஒரு நடைமுறை சாத்தியமுள்ள 'பிளான் பி' உத்தியாகவே பணக்கார குடும்பங்கள் இதைப் பார்க்கின்றன" என்கிறார்.
பெரும்பாலும் ரூ.100 கோடிக்கு அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள், முன்னணி நிதி நிறுவனங்களின் மேலாண் இயக்குநர்கள் (MD), தலைமைச் செயலதிகாரிகள் (CEO) மற்றும் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் கார்ப்பரேட் உயர் அதிகாரிகள் இந்த வெளிநாட்டு முதலீடு யூத்தியை கையாளுகின்றனர்.
இதனால் நேரடியாக பணக்கார இந்திய குடும்பங்கள் எல்லாமே நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றனர் எனப் பொருள்கொள்ள முடியாது என்கின்றனர்.
உலகவில் இடம் பெயருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பது ஒரு சொத்தாக பார்க்கப்படுகிறது.
MyRCBI தகவலின்படி, இந்திய பணக்காரர்கள் பெரும்பாலும் அமெரிக்கா (EB-5 Visa), போர்ச்சுகல், கிரீஸ், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் கரீபியன் தீவு நாடுகளின் குடியுரிமைத் திட்டங்களையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.
இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் இந்த நாடுகளில் குடியேறுவதற்கான முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். உலகப் பணக்காரர்கள் எல்லோரும் ஒன்றாக வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை இது உருவாக்குகிறது.
இந்த மாதிரி பணக்கார நாடுகளில் குடியுரிமை பெறுவது எளிதான காரியம் அல்ல. இவை குறிப்பிட்ட அளவு கோடிகளில் முதலீடு செய்தால் மட்டுமே குடியுரிமை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளன.
அந்த நாடுகளில் கோடிகளைக் கொட்டுவதன் மூலம் தங்குதடையற்ற சர்வதேசப் பயணம், உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவை எளிதில் கிடைக்கின்றன.
முதலீட்டு வழிக் குடியேற்றச் சந்தையில், சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இணையான ஒரு மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் EB-5 முதலீட்டாளர் திட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் விண்ணப்பங்களே கணிசமான பங்கைக் வகிக்கின்றன.
இந்தியாவில் ஆரம்பத்தில் மும்பை மற்றும் டெல்லியில்தான் இதற்கான தேவை அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலம் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தொழிலை விரிவுபடுத்தும் குஜராத் தொழிலதிபர்கள், தங்களது குடும்பத்தின் இருப்பிடம், பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்களைக் கட்டமைப்பு செய்யும் முறையிலும் சர்வதேச அளவில் சிந்திக்கத் தொடங்கியிருப்பதே இதற்கு முதன்மை காரணம்.
இந்தியச் 'சூப்பர் ரிச்' மனிதர்களைப் பொறுத்தவரை, மற்றொரு நாட்டின் குடியுரிமையையோ வசிப்பிட உரிமையையோ பெறுவது என்பது இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான வழி அல்ல; மாறாக, தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கை எங்கு தொடங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைப் பெறுவதற்கான வழி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்