உலகத்தில் இருந்து எவ்ளோ பீஸ் வந்தாலும்.. "ஒரிஜினல் பீஸ்" இதுதான்.. அடிச்சிக்க முடியாது - இந்தியாவின் அடையாளம்

இந்த வைரம் முதன்முதலில் இந்தூர் மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் II-வோட குடும்பத்துக்கு சொந்தமானது.
diamonds
diamonds
Published on
Updated on
3 min read

கோல்கொண்டா என்றாலே வைரங்கள் தான்! ஹைதராபாத் நகரின் கோல்கொண்டா பகுதி ஒரு காலத்துல உலகத்தின் வைரத் தலைநகரமா விளங்கியது. இந்தப் பகுதியிலிருந்து வந்த வைரங்கள், கோஹினூர், ஹோப், ட்ரெஸ்டன் பச்சை, ரீஜென்ட் மாதிரியான உலகப் புகழ் பெற்ற கற்களை உருவாக்கின.

இப்போ, இதே கோல்கொண்டாவிலிருந்து வந்த “கோல்கொண்டா நீலம்” (The Golconda Blue) என்ற 23.24 காரட் நீல வைரம், கிறிஸ்டி ஏலத்தில் (Christie’s Auction) 300 முதல் 430 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, ஏலத்துக்கு முன்னாடியே இந்த வைரம் தனியார் முறையில் விற்கப்பட்டு, உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கு.

கோல்கொண்டா நீலம்: ஒரு அரிய புதையல்

இந்த 23.24 காரட் நீல வைரம், வெறும் கல் மட்டும் இல்லை; இந்தியாவோட அரச பாரம்பரியத்தோட ஒரு பகுதி. இந்த வைரம் முதன்முதலில் இந்தூர் மகாராஜா யஷ்வந்த் ராவ் ஹோல்கர் II-வோட குடும்பத்துக்கு சொந்தமானது. 1923-ல, இவரோட தந்தை இந்த வைரத்தை பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பு நிறுவனமான ஷோமெட் (Chaumet)-க்கு கொடுத்து, ஒரு அழகிய வளையல் (bracelet) ஆக வடிவமைக்கச் செய்தார். இந்த வளையல்ல, இந்தூர் மகாராஜாவோட மற்றொரு புகழ்பெற்ற வைரங்களான “இந்தூர் பேர்ஸ்” (Indore Pears) உடன் இந்த நீல வைரமும் பதிக்கப்பட்டிருந்தது.

1930-களில், மகாராஜா மவுபோசின் (Mauboussin) என்ற மற்றொரு பிரபல பிரெஞ்சு நகை நிறுவனத்தை அணுகி, இந்த வைரத்தை ஒரு மகத்தான ஹாரமாக (necklace) மாற்றினார். இந்த ஹாரை இந்தூர் மகாராணி சன்யோகிதாபாய் தேவி அணிந்து, பிரெஞ்சு ஓவியர் பெர்னார்ட் பூட்டே டி மோன்வெல் (Bernard Boutet de Monvel) வரைந்த ஓவியத்தில் அழியாப் புகழ் பெற்றார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைஞ்ச பிறகு, இந்த வைரம் அமெரிக்காவுக்கு பயணித்து, புகழ்பெற்ற நகை வியாபாரி ஹாரி வின்ஸ்டன் (Harry Winston) கைவசமானது. இவர் இதை ஒரு வெள்ளை வைரத்தோடு இணைத்து ஒரு ப்ரூச் (brooch) ஆக மாற்றினார்.

பின்னர், இந்த வைரம் பரோடா மகாராஜாவுக்கு சொந்தமானது. இப்போ, இந்த வைரம் பிரபல பாரிஸ் நகை வடிவமைப்பாளர் JAR (Joel Arthur Rosenthal) வடிவமைச்ச ஒரு நவீன மோதிரத்தில் பதிக்கப்பட்டு, உலகின் மிக அரிய நீல வைரங்களில் ஒண்ணா பேசப்படுது.

இந்த வைரத்தோட மதிப்பு அதோட அளவு அல்லது நிறத்துல மட்டும் இல்லை; இதோட வரலாறு, இந்திய அரச குடும்பங்களோட தொடர்பு, கோல்கொண்டா வைரங்களோட தனித்தன்மை ஆகியவை தான் இதுக்கு இவ்வளவு மவுசு கொடுக்குது. ஆனா, இந்த வைரம் ஏலத்துக்கு வராம, தனியார் முறையில விற்கப்பட்டது, இதோட மர்மத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கு.

கோல்கொண்டா வைரங்கள்: உலகின் முதல் வைரங்கள்

கோல்கொண்டா வைரங்கள் ஏன் இவ்வளவு பேசப்படுது? இதுக்கு காரணம், இவை உலகின் முதல் மற்றும் மிக உயர்ந்த தரமுள்ள வைரங்களா இருந்ததுதான். கோல்கொண்டா, இப்போ ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள கோதாவரி-கிருஷ்ணா டெல்டா பகுதியில இருந்து வந்தவை. இந்த வைரங்கள் Type IIa வகையைச் சேர்ந்தவை, அதாவது, இவை தூய கார்பனால ஆனவை, நைட்ரஜன் இல்லாதவை, பெரிய அளவு மற்றும் உயர்ந்த தெளிவு (clarity) கொண்டவை. இதனால, இவை "diamonds of the first water" வைரங்கள்னு அழைக்கப்பட்டு, உலகின் மிகப் பிரபலமான வைரங்களா மாறின.

கோல்கொண்டாவின் வைரங்கள் 2000 வருஷங்களுக்கு மேல உலகின் ஒரே வைர ஆதாரமா இருந்தன. 16-லிருந்து 18-ஆம் நூற்றாண்டு வரை இந்தப் பகுதியில 23 சுரங்கங்கள் இயங்கின, அதுல குறிப்பா கொல்லூர் சுரங்கம் (Kollur Mine) மிகவும் பிரபலம். இந்த சுரங்கத்துல ஒரே நேரத்துல 30,000 பேர் வேலை செய்ததா பதிவுகள் சொல்லுது! இந்த சுரங்கங்கள் சுமார் 10 மில்லியன் காரட் வைரங்களை உற்பத்தி செய்திருக்கு. ஆனா, 1830-க்கு பிறகு, அதிகப்படியான சுரங்க வேலைகளால இந்த சுரங்கங்கள் வற்றிப்போயின. இப்போ, இந்த வைரங்கள் அரிய, பழமையான (antique) மற்றும் விலைமதிப்பற்றவையா கருதப்படுது.

கோல்கொண்டாவின் புகழ்பெற்ற வைரங்கள்:

கோஹினூர்: வண்ணமற்ற, 105.6 காரட் வைரம், இப்போ பிரிட்டிஷ் மகுட நகைகளில் லண்டனில் உள்ள டவர் ஆஃப் லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு.

ஹோப் வைரம்: 45.52 காரட் நீல வைரம், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

ட்ரெஸ்டன் பச்சை: 41 காரட் பச்சை வைரம், ஜெர்மனியில் உள்ள க்ரீன் வால்ட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு.

ரீஜென்ட் வைரம்: 140.64 காரட் வண்ணமற்ற வைரம், பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது.

ஒர்லோவ் வைரம்: 189.62 காரட் வண்ணமற்ற வைரம், மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் ஆர்மரியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு.

இந்த வைரங்கள் ஒவ்வொண்ணும் ஒரு கதையைச் சொல்லுது. இந்திய மன்னர்கள், முகலாய பேரரசர்கள், ஐரோப்பிய அரச குடும்பங்கள், பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் ஆகியோரோட கைகளில் இவை பயணிச்சிருக்கு.

கோல்கொண்டாவின் வரலாறு: வைரங்களின் தலைநகரம்

கோல்கொண்டா ஒரு காலத்துல குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகரமா இருந்தது. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோல்கொண்டா கோட்டை, அரண்மனைகள், கருவூலங்கள், நகைகள் விற்கப்பட்ட பஜார் ஆகியவற்றோடு ஒரு முக்கியமான வணிக மையமா விளங்கியது.

இந்தப் பகுதியிலிருந்து வந்த வைரங்கள், கிருஷ்ணா ஆற்றின் கரையில உள்ள கொல்லூர் உள்ளிட்ட சுரங்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த சுரங்கங்கள் ஆழமில்லாதவை, ஆனா மிக உயர்ந்த தரமுள்ள வைரங்களை உற்பத்தி செய்தன.

கோல்கொண்டாவின் வைரங்கள் உலக அளவில் புகழ் பெறக் காரணம், இங்கு நடந்த வைர வணிகம் தான். பிரெஞ்சு வணிகர் ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர் (Jean-Baptiste Tavernier) 17-ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்து, இங்கு நடந்த வைர வணிகத்தைப் பற்றி விரிவா எழுதியிருக்கார். இவரோட “Six Voyages” புத்தகம், கோல்கொண்டாவின் வைரங்களோட தரத்தையும், அவை எப்படி உலக அரசர்களின் கைகளுக்கு போனதையும் விவரிக்குது. இவர் பார்த்த “கிரேட் மொகல்” வைரம், 796 காரட் எடையுள்ள ஒரு பிரம்மாண்டமான கல், ஆனா அது இப்போ காணாமல் போயிருக்கு.

கோல்கொண்டாவின் வீழ்ச்சி

18-ஆம் நூற்றாண்டில், பிரேசிலில் வைர சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், 19-ஆம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவில் புதிய சுரங்கங்கள் திறக்கப்பட்டதும், கோல்கொண்டாவின் முக்கியத்துவம் குறைய ஆரம்பிச்சது. அதிகப்படியான சுரங்க வேலைகளால, 1830-க்கு பிறகு கோல்கொண்டாவின் சுரங்கங்கள் வற்றிப்போனது. சில சுரங்கங்கள் புலிச்சிந்தலா அணையின் நீரில் மூழ்கின. இதனால, கோல்கொண்டா வைரங்கள் இப்போ அரிய பொக்கிஷங்களா மாறியிருக்கு.

ஆனா, 2015-ல், ஒஸ்மானியா பல்கலைக்கழகமும் இந்திய புவியியல் ஆய்வு மையமும் (Geological Survey of India) இணைந்து, கிருஷ்ணா, பீமா, துங்கபாத்ரா, பெண்ணா ஆறுகளின் படுகைகளில் 21 புதிய சுரங்க இடங்களைக் கண்டுபிடிச்சாங்க. இவை கிம்பர்லைட் (kimberlite) பாறைகளைக் கொண்டிருக்கலாம்னு நம்பப்படுது, ஆனா இன்னும் முழுமையான சுரங்க வேலைகள் தொடங்கல. 2022-ல, ஆந்திரப் பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களில் வைர இருப்பு இருக்கலாம்னு தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) கண்டுபிடிச்சது, இந்தப் பகுதியோட வைர வரலாறு இன்னும் முடியலன்னு காட்டுது.

கோல்கொண்டா வைரங்கள் வெறும் பொருளாதார மதிப்பு மட்டுமல்ல, கலாச்சார முக்கியத்துவமும் கொண்டவை. மார்கோ போலோ, அரேபிய இரவுகள் கதைகள், ஜீன்-பாப்டிஸ்ட் டேவர்னியர் ஆகியோரோட பயணக் குறிப்புகளில் இந்த வைரங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கு.

இந்த வைரங்கள் சில சமயங்களில் சாபத்தோட தொடர்புடையவையா கருதப்பட்டன. உதாரணமா, ஹோப் வைரம் அதன் உரிமையாளர்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொடுத்ததா ஒரு புராணம் உண்டு. ஆனா, இந்தக் கதைகள் பெரும்பாலும் வைரங்களோட மதிப்பை உயர்த்தவும், அவற்றை மர்மமானவையாக காட்டவும் உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில், வைரங்கள் ஆன்மீக மற்றும் அரச பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்தவை. முகலாய பேரரசர்கள், குறிப்பா ஜஹாங்கீர், 130,000 காரட் வைரங்களை தன்னோட கருவூலத்தில் வைத்திருந்தார். கோல்கொண்டா வைரங்கள் ஐரோப்பாவுக்கும் பயணிச்சு, அங்கு அரசர்களோட மகுடங்களையும், வாள்களையும் அலங்கரிச்சது.

இந்தநிலையில், கோல்கொண்டா நீல வைரத்தோட ஏலம் திரும்பப் பெறப்பட்டது, இந்த வைரங்களோட மதிப்பையும், அவை இன்னும் உலகளவில் ஈர்க்குற ஆர்வத்தையும் காட்டுது. இந்த வைரங்கள் இந்தியாவோட கலாச்சார, வரலாற்று பாரம்பரியத்தோட ஒரு அங்கமா இருக்கு.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com