
நாட்டில் பஞ்சாயத் ராஜ் நடைமுறையை வலுப்படுத்த 2 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம்:
பிரதமர் மோடி டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் உரையாற்றவுள்ளார். இதன்படி டெல்லியில் இருந்து முதலில் மத்திய பிரதேசத்திற்கு சென்ற பிரதரை அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முறைப்படி வரவேற்றார். பின்னர் ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் சிறப்பு கண்காட்சியையும் பார்வையிட்டார்.
பஞ்சாயத்துராஜ்:
இதையடுத்து நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை வலுப்படுத்த மத்திய அரசு சீராக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் எந்தவொரு திட்டம் என்றாலும், அதனை நம்முடைய பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருவதாகவும் 2014-ம் ஆண்டுக்கு பின் பஞ்சாயத்துகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடானது, 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பயணிகள் ரயில்:
அதனை தொடர்ந்து சிந்த்வாரா-நைன்பூர் உள்ளிட்ட மூன்று புதிய பயணிகள் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மத்திய பிரதேசத்திற்கான 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொச்சி பயணம்:
பின்னர் கேரளாவின் கொச்சி நகருக்கு பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சாலையின் இருபுறம் கூடியிருந்த பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி வரவேற்றனர். அதன் பின்னர் திவாரா பகுதியில் நடந்த இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் பாஜக மற்றும் இந்திய இளைஞர்கள் ஒரே மனநிலையுடன் செயல்பட்டு வருவதாகவும் பாஜக சீர்திருத்தங்களை கொண்டு வருவதாகவும், இளைஞர்கள் முடிவுகளை கொண்டு வருவதாகவும் கூறினார்.