“117 வீடியோ லிங்க்..!” – பாலியல் துன்புறுத்தல் முதல் மத மாற்றம் வரை.. TCS மீது தேசிய மகளிர் ஆணையம் கடும் குற்றச்சாட்டு!

அறிக்கையின்படி, பல பெண் ஊழியர்கள் அமைப்பு ரீதியான துன்புறுத்தல்
tcs case in nashik
Published on
Updated on
2 min read

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் நாசிக் கிளையில் பெண் ஊழியர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து, தேசிய மகளிர் ஆணையம் (NCW) சமர்ப்பித்துள்ள அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், அங்கு நிலவிய பணியிட சூழல் பெண் ஊழியர்களுக்கு “மிகவும் டாக்ஸிகாக இருந்துள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி சாதனா ஜாதவ் தலைமையிலான விசாரணைக் குழு, நாசிக்கில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, புகார்தாரர்கள், காவல்துறை அதிகாரிகள், மனிதவள நிர்வாகிகள் மற்றும் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பல பெண் ஊழியர்கள் அமைப்பு ரீதியான துன்புறுத்தல், மனரீதியான அழுத்தம் மற்றும் பணியிடத்தில் கொடுமைப்படுத்தல் போன்ற பிரச்சனைகளை, எதிர்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பின்தொடர்தல், முறையற்ற தொடுதல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல் மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளன.

புகார் அளித்த பெண்களில் பலர், பழிவாங்கப்படுவோம் என்ற அச்சத்தால் நிறுவனத்தின் உள்ளக புகார் அமைப்பை அணுகுவது பாதுகாப்பானதாக இல்லை என்று குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அமைப்பின் மீது கடுமையான நம்பிக்கையின்மை நிலவியதாக NCW குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், பணியிடத்தில் மத ரீதியான தாக்கம் மற்றும் மதமாற்ற முயற்சிகள் குறித்த குற்றச்சாட்டுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் நிடா கான், புகார்தாரர்களில் ஒருவருக்கு 171 மத வீடியோ இணைப்புகளை பகிர்ந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் தொடர்புகள் மற்றும் பலரின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், அலுவலகத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டமான POSH விதிமுறைகளில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லை என்று NCW அறிக்கை கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது. புகார்களை கையாளும் நடைமுறைகள் பலவீனமாக இருந்ததோடு, உள் கண்காணிப்பு திறனற்றதாகவும், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை வெறும் மனிதவள குறைபாடாக பார்க்காமல் “கடுமையான நிர்வாகத் தோல்வி” என ஆணையம் விவரித்துள்ளது.

பணியிட பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 25க்கும் மேற்பட்ட பரிந்துரைகளும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. POSH விதிகளை கடுமையாக அமல்படுத்துதல், சுயாதீன கண்காணிப்பு, பெண் ஊழியர்களுக்கான ஆலோசனை ஆதரவு, தகவல் தெரிவிப்போர் பாதுகாப்பு மற்றும் காலந்தோறும் பணியிட ஆய்வுகள் நடத்துதல் போன்ற பரிந்துரைகள் இதில் அடங்கும். இதுகுறித்து பதிலளித்த டாடா கன்சல்டன்சி நிறுவனம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை சில ஊழியர்கள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா காவல்துறை மற்றும் சிறப்பு புலனாய்வு குழுக்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com