டிசிஎஸ் நிறுவனத்தில் நடந்த பகீர் மதம் மாற்ற முயற்சி: மலேசியாவுக்கு கடத்த திட்டமா? - சிக்கிய ஆதாரங்கள்!

நிதா கான் அந்தப் பெண்ணுக்குப் புர்கா மற்றும் மத நூல்களைக் கொடுத்து மதம் மாறத் தூண்டியுள்ளார்
TCS relogious conversion case
Published on
Updated on
2 min read

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் நிறுவன கிளையில் பணியாற்றிய பெண் ஊழியரை மதம் மாற்ற முயன்ற விவகாரத்தில் தற்போது அதிர வைக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை மாற்ற முயன்றதுடன், அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றவும் திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இம்ரான் என்பவரிடம் அவரை அனுப்ப சதித் திட்டம் தீட்டப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நிதா கான், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது சக ஊழியரின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதோடு, அவரை மதம் மாறச் சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. நிதா கான் அந்தப் பெண்ணுக்குப் புர்கா மற்றும் மத நூல்களைக் கொடுத்து மதம் மாறத் தூண்டியுள்ளார். அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவை எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் சில குறிப்பிட்ட மதச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்ததோடு, சமூக வலைதளங்கள் வாயிலாகத் தொடர்ந்து மதத் தொடர்பான வீடியோக்களை அனுப்பி மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளனர். அந்தப் பெண்ணின் கல்விச் சான்றிதழ்களைப் பிடுங்கிக் கொண்ட நிதா கான், அவரது பெயரை 'ஹனியா' என்று மாற்ற வற்புறுத்தியுள்ளார். இதற்காக மாலேகான் பகுதியில் உள்ள சிலரைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதும் அம்பலமாகியுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள நிதா கான், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரினார். ஆனால் நீதிமன்றம் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.

இந்தக் கும்பலில் கைதான டேனிஷ் ஷேக் என்பவர், பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். டேனிஷுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதை அறிந்த அந்தப் பெண் இது குறித்துக் கேட்டபோது, அவரை மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி மிரட்டியுள்ளனர். மற்றொரு குற்றவாளியான தௌசிப் பிலால் அத்தார் என்பவர், அந்தப் பெண்ணின் தனிப்பட்ட ரகசியங்களை குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது வரை ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் எட்டு பேர் இந்தக் கும்பலுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் எட்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் இன்னும் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நிதா கானைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரையும் டிசிஎஸ் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com