

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்து சில மாதங்களே ஆனா நிலையில், அரசுக்கு மின்வெட்டு பிரச்சனை தலையாய சவாலாக இருந்து வருகிறது. தவெக தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என தவெக உறுதியளித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைந்த சில வாரங்களிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்த புகார்கள் எழத் தொடங்கின. இதற்கிடையே, மின் தேவை அதிகரிப்பு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் தேவையை சமாளிக்க, தனியாரிடமிருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இது வரலாற்றிலேயே மிகவும் அதிக கட்டணம் என்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் தொழில்துறை அமைச்சர் TRB
யூனிட் ஒன்றுக்கு ரூ.35 -க்கு கொள்முதல் செய்யும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரமாரி கேள்விகளுடன் செய்துள்ளார். ₹5-க்கு உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை ₹35 செலவழித்து வாங்கும் TVK அரசின் நிர்வாகம்! TVK அரசு 2026 மே 23ல், முந்தைய திமுக அரசு அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததாகக் குற்றம்சாட்டினார்கள்! அவர்களே 2026 ஜூன் 25ல், நீண்ட கால ஒப்பந்தங்கள் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவோம் என வாக்குறுதி அளித்தது.
மின் உற்பத்தி, இறக்குமதி நிலக்கரி கொள்முதல் ஆகியவற்றில் இந்த அரசு படு மோசமாக சொதப்பியதால் தான் இன்று இந்த நிலை! தற்போதைய ஒப்பந்தப்படி, வெறும் 20 நாட்களுக்கு முழு மின்சாரமும் வாங்கப்பட்டால் ₹3,100 கோடிக்கும் அதிகமான செலவு என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்! மக்களின் வரிப்பணத்தில் இப்படியொரு வீண் செலவு ஏன்? மின் கட்டணத்தை மட்டுமல்ல, இந்த முடிவுகளுக்கான முழுக் கணக்கையும் மக்களிடம் காட்ட முடியுமா? என்றும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அரசின் இந்த முடிவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து பதிவிட்டுள்ளார். “ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்க அதிக விலையில் ஒப்பந்தம் போட்டு, ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்” என்று பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
அவரை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்தால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியம் ரூ.2.47 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவித்து வருவதாகவும், வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் அதிகமாகச் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதால் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்றும், இதனால் தமிழ்நாடு மின்வாரியம் இன்னும் ஓராண்டுகூட செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படலாம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும், மின் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் சரமாரி கேள்விகளையும் எழுப்பியுள்ளார். "மின்சாரத்துறை அமைச்சர் அவருடைய துறையைத் தவிர மற்ற எந்த துறையிலிருந்து கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார். அவருடைய துறையில் கேள்வி கேட்டால், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஒரு கேள்வி கேட்கும் போது அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டியது அமைச்சருடைய கடமை. அதற்கு தீர்வு காண வேண்டியது அரசினுடைய அந்த துறையின் உடைய கடமை.
மின்வெட்டை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அரசாக தவெக அரசு உள்ளது. கொஞ்ச காலமாக பியூஸ் கேரியர்கள் காணாமல் போய்விட்டதாக சொன்னார்கள். அதற்கு பிறகு துறையில் கருப்பாடுகள் இருப்பதாக சொன்னார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக அடுக்கிக்கொண்டு வந்த மின்துறை அமைச்சர் கடைசியாக பஞ்சாப்பில் 15 நிமிடம் மின்வெட்டு நடக்கிறது என பேசும் அளவு மோசமான ஒரு சூழ்நிலையில் இன்றைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது." என்றார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 2023 இல் இன்றைய மின் துறை அமைச்சர் ஒரு பதிவை போட்டிருக்கிறார். "20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கிறார்கள், Resign EB Minister" என பதிவு போட்டிருக்கிறார். இன்றைய தவெக அரசு 35 ரூபாய்க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது.. இப்போது அவர் ராஜினாமா செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
மக்களிடம் ஏற்கனவே பன்மடங்கு மின் கட்டணம் வசூலித்து வரும் நிலையில், ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு தனியாரிடம் வாங்கினால் இன்னும் எத்தனை மடங்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்த போகிறீர்கள்? மீண்டும் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது கையூட்டிற்காகவா? என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பு விளக்கமளித்துள்ளார் அமைச்சர் நிர்மல்குமார். "வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழ்நாட்டுக்கான மின் தேவை அதிகமாக உள்ளது; என்.எல்.சி.யில் இருந்து வர வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை; ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்யும் முடிவு தற்காலிக நடவடிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் நிர்மல்குமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்