

சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையின் போது, சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதிகளான மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் சென்னை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை மாதவரம் பகுதியில் உள்ள பனிக்கட்டி தொழிற்சாலை அருகே அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நடமாடும் ஐஸ் வண்டியை நிறுத்தி சோதனை செய்தபோது, வெள்ளை நிறப் பொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 சிறிய பொட்டலங்களில் சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் சென்னையை சேர்ந்த அப்துல் சுக்கூர் மற்றும் ஷபிக் அகமது ஆகிய இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாரிடம் கொண்டு செல்லப்பட இருந்தது, இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்கிரீம் வண்டியை பயன்படுத்தி இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே சென்னையில் இவ்வளவு பெரிய அளவில் ஹெராயின் சிக்கியுள்ளது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
ஒரு கிலோ ஹெராயின் சர்வதேச சந்தையில் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுவதாக DRI மதிப்பிட்டுள்ளது. இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.விசாரணையில், இந்தப் போதைப்பொருள் சரக்கை திருச்சி வழியாகக் கொண்டு சென்று, பின்னர் கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து போதைப்பொருள் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் கைதான இருவரும் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், சர்வதேச அளவில் செயல்படும் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.