

சென்னை மாதவரம் பகுதியில் வாகன சோதனையின்போது, சுமார் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதவரம் பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டி.ஆர்.ஐ. அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போதைப்பொருளை கடத்தி வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரையும் அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யாரிடம் கொண்டு செல்லப்பட இருந்தது, இதன் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதவரம் பகுதியில் சுமார் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நாகப்பட்டினம்தவெக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்திருந்திருந்தினர். தற்போது தலைநகர் சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.