சத்துமாவு கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரி வழக்கு...! தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!

சத்துமாவு கொள்முதலுக்கான டெண்டருக்கு தடை கோரி வழக்கு...! தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்...!
Published on
Updated on
1 min read

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சத்துமாவு கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கடந்த 7 ஆம் தேதி கோரியிருந்தார்.

இந்த டெண்டரில், கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் அளவுக்கு சப்ளை செய்திருக்க வேண்டும், ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகள் தனிச்சையானவை என்று கூறி, இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என பெங்களுருவைச் சேர்ந்த சிவ கங்கா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த நிறுவனம் அளித்த மனுவில், சிறிய நிறுவனங்களை டெண்டரில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் வகையில்  நிபந்தனைகள் விதித்து வெளியிட்டுள்ள இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நிபந்தனைகளை தளர்த்தி, புதிய டெண்டர்களை கோர உத்தரவிட வேண்டும் என்றும்  குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 38 மாவட்டங்களுக்கு 799 கோடி ரூபாய் மதிப்பில் சத்துமாவு கொள்முதல் செய்ய வெளியிடப்பட்ட இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் தன்னிச்சையானது என்று கூற முடியாது என்றும், நிபந்தனைகள் குறித்து டெண்டர் கோரும் அதிகாரி தான் முடிவு செய்வார் என்றும், குழந்தைகளுக்கு சத்துமாவு தடையில்லாமல் சப்ளை செய்வதை உறுதி செய்வதற்காக தான் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி சுரேஷ்குமார், குழந்தைகளுக்காக சத்துமாவு கொள்முதல் செய்யப்படுவதால், உணவு தரம், பாதுகாப்பு கருதி இந்த நிபந்தனைகள் அவசியம் எனவும், அதனால் இந்த நிபந்தனைகள் தன்னிச்சையானது என்று கூறமுடியாது என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com