

தமிழகத்தில் பருவமழை காலம் தொடங்கினாலும், தற்போதுதான் மழை தீவிரமடையத் துவங்கியுள்ளது. தமிழகத்தின்தென் மாவட்டங்கள் மற்றும், கடலோர பகுதிகள் அதிகளவிலான மழை பொழிவை சந்தித்து வருகின்றன.
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில், கடலூர், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்.
அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று, காலை 05.30 மணி வரை அதேப் பகுதியில் நீடித்தது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.