

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அம்சா. இவர்களுக்கு ஒன்னறை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் நேத்ரா என்ற பெண்ணும் அம்சாவும் தோழிகள். இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனை அழைத்து செல்வதற்காக கீழ்பென்னாத்தூரிலிருந்து திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே பேருந்தில் வந்து குழந்தையுடன் அம்சா இறங்கியுள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல அம்சா குழந்தையுடன் அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே நடந்து செல்லும் போது திடீரென அங்கு வந்த நேத்ரா மற்றும் அவரின் நண்பர் திருப்பதி ஆகியோர், அம்சாவை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அம்சாவை அழைத்து சென்ற அவர்கள் அவர் அணிந்திருந்த 4 சவரன் நகைக்காக அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, சாக்கு பையில் அவரது உடலை போட்டு ஏந்தல் புறவழிச் சாலை செல்லும் பள்ளிகொண்டாம் பட்டு சாலை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் உடலை வீசி உள்ளனர்.
மருத்துவமனை சென்ற மனைவி காணவில்லை என்று அம்சாவின் கணவர் சக்திவேல் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் செல்போன் டவரை வைத்து நேத்ரா மற்றும் திருப்பதியை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசாருக்கே உரிய பாணியில் விசாரித்ததில் அம்சாவை அழைத்துச் சென்று நான்கு சவரன் நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இறந்து போன அம்சாவின் உடல் இன்று சாக்குப் பையில் கட்டிய நிலையில் கரும்பு தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் நேத்ரா மற்றும் திருப்பதி ஆகிய இருவரையும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன பெண் 28 நாட்களுக்கு பிறகு சாக்கு பையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடத்தில் அம்சா கணவரும் மற்றும் உறவினரும் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.