தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகராக வலம் வரும் ஆதி மற்றும் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான நிக்கி கல்ராணி ஆகியோர் இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த இந்த நட்சத்திர தம்பதி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக அரசியல் மற்றும் தேர்தல் குறித்துப் பல சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆதி, இந்தத் தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், "சமூக வலைதளங்களைப் பார்க்கும் போது இந்த முறை இளைய தலைமுறையினர் அதிக அளவில் வாக்குச் சாவடிகளுக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விஷயம். ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தங்களது மனசாட்சிக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்யட்டும். சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. பாண்டிச்சேரியில் ஏற்கனவே 92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறது. தமிழகத்திலும் இந்த முறை அதே போன்ற ஒரு மிகப்பெரிய வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகும் என்று நான் நம்புகிறேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை நிக்கி கல்ராணி, வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார். "வாக்கு என்பது உங்கள் கையில் இருக்கும் மிகப்பெரிய 'பவர்'. தயவுசெய்து யாரும் வீட்டில் இருக்காதீர்கள். நீங்கள் எல்லோரும் இந்தத் தேர்தலில் உங்களுடைய பவரைச் சரியாகப் பயன்படுத்துங்கள். நாங்கள் எல்லாரும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். அந்த மாற்றம் வருமா? என்பது வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போதுதான் நமக்குத் தெரியும். மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் கட்டாயம் வந்து வாக்களிக்க வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்