தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூதாட்டியின் வாக்கை அதிகாரி தன்னிச்சையாக மாற்றிப் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு இன்று மதியம் ஒரு மூதாட்டி வாக்களிக்க வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண் பார்வை குறைபாடு காரணமாக, தனக்கு உதவி செய்யுமாறு அங்கிருந்த தேர்தல் அலுவலரிடம் அந்தப் பெண்மணி கோரிக்கை விடுத்துள்ளார். அப்போது, தான் "விசில்" சின்னத்திற்குத்தான் வாக்களிக்க விரும்புவதாகவும், அந்தச் சின்னத்தில் அழுத்துமாறும் அதிகாரியிடம் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் 5-வது எண்ணில் இருந்த விசில் சின்னத்திற்குப் பதிலாக, 1-வது எண்ணில் இருந்த உதயசூரியன் சின்னத்தில் அந்த அதிகாரி அழுத்திவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்திலிருந்து சத்தம் வந்தவுடன், அங்கிருந்த தமிழக வெற்றி கழக (TVK) நிர்வாகி ஒருவருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரியிடம் சென்று விசாரித்தபோது, அந்த மூதாட்டியின் வாக்கு உதயசூரியன் சின்னத்திற்கு விழுந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகி, "அடுத்தவர் ஓட்டை எப்படி நீங்கள் மாற்றிப் போடலாம்? 5-வது நம்பரை அழுத்தச் சொன்னால், எப்படி 1-வது நம்பரை அழுத்தினீர்கள்?" என்று கேட்டு அதிகாரியைச் சாடினார். "உதவி செய்யச் சொன்னால் இப்படித்தான் முறைகேடு செய்வீர்களா?" என அவர் எழுப்பிய கேள்விகளால் அந்த வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்த தேர்தல் அலுவலர் திட்டவட்டமாக மறுத்தார். "நான் எந்தச் சின்னத்தையும் மாற்றி அழுத்தவில்லை, அவர் சொன்ன சின்னத்தில்தான் அழுத்தினேன்" என்று அவர் விளக்கம் அளித்தார். ஆனால், தவெக நிர்வாகிகள் அதை ஏற்க மறுத்து, தேர்தல் ஆணையத்தின் விதிகளைச் சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்