

நடிகர் இம்ரான் கானை, அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பையில் உள்ள வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகம் (FRRO) கேட்டுக்கொண்டுள்ளது.
இம்ரான் கான் அக்டோபர் 10 அன்று மும்பை சென்ட்ரலில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கக் குடிமகன் என்று கூறப்பட்டும் இம்ரான் கான், அமெரிக்க கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு இந்தியக் குடிமகனாக (OCI) உள்ளார்.
இந்தநிலையில் அவர் CJP போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் கிரீட் சோமையா புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மும்பை காவல்துறை அளித்த அறிக்கையில், "FRRO நடவடிக்கை எடுத்துள்ளதுடன், OCI அட்டையில் [இந்தியாவில்] இருக்கும் நடிகர் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாலிவுட் நட்சத்திரம் அமீர் கானின் மருமகனும் நடிகருமான இவர், கார் பகுதியில் வசித்து வருகிறார், மேலும் இவருக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது." எனக் கூறப்பட்டுள்ளது.
FRRO என்பது வெளிநாட்டுக் குடிமக்களின் பதிவு, நடமாட்டம், தங்குதல், புறப்படுதல் மற்றும் விசா நீட்டிப்புகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பொறுப்பான ஏஜென்சி ஆகும்.
இம்ரான் கான் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். அமீர்கானின் சகோதரியின் மகனான இவர், இந்தியாவின் பாலிவுட் சினிமாவில் நடிகராக பணியாற்றி வருகிறார்.
வெளிநாட்டு குடிமகன் எப்படி இந்திய தேர்தல் ஆணையருக்கு எதிராக போராடலாம் பாஜகவினர் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியபோது, "எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு குடிமகனாக, இந்த நகரத்தில் வாழும் ஒரு நபராக இங்கு இருக்கிறேன். இயக்கத்தின் சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்கவே நான் இங்கு வந்திருக்கிறேன். மக்களின் குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன? அதனால்தான் நான் இங்கு இருக்கிறேன்." என வீடியோவில் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்