இனி உயிரைப் பறிக்கும் குவாரி குழிகளுக்கு வேலி! 2 மாதங்களுக்குள் முடிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!

மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றி இரண்டு மாதங்களுக்குள் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Abandoned Quarries
Abandoned Quarries
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட குவாரிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் இந்தக் குவாரிகளில் மழைநீர் நிரம்பி, ஆழமான நீர்நிலைகள் போலக் காட்சியளிக்கின்றன. அவற்றின் உண்மையான ஆழம் தெரியாமல் உள்ளே இறங்குபவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றி இரண்டு மாதங்களுக்குள் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்கள், ஜல்லி உள்ளிட்ட கனிமங்களை எடுப்பதற்காக பல இடங்களில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதி பெற்று இயங்கும் இந்தக் குவாரிகளில், குத்தகைக் காலம் முடிந்த பிறகு சில இடங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பதில்லை. சில இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் பெரிய பள்ளங்களும் ஆழமான குழிகளும் உருவாகியுள்ளன. அவை முறையாக மூடப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமலும் இருப்பதே தற்போது முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் இந்தப் பள்ளங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்குகிறது. மேலிருந்து பார்க்கும்போது அதன் ஆழம் தெரியாததால், அருகில் வசிப்பவர்கள், குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கைவிடப்பட்ட குவாரிகள் குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் டி. பிரபுசங்கர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள காலாவதியான, கைவிடப்பட்ட அனைத்து குவாரிகளையும் சுற்றி நீடித்து உழைக்கக்கூடிய கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான நிலங்களில் இருக்கும் கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றி வேலி அமைப்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள், 1959-ன் கீழ் உருவாக்கப்பட்ட பசுமை நிதியைப் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் இருக்கும் பிற நிதிகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை எந்தவித தாமதமும் இன்றி இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் பட்டா நிலங்களில் செயல்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள குவாரிகளுக்கும் தனி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று, குத்தகைக் காலம் முடிந்த குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு ஏற்கெனவே பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பட்டா நிலங்களில் உள்ள குவாரிகளுக்கு வேலி அமைக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட முன்னாள் குத்தகைதாரர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது சொந்த செலவில் முறையான பாதுகாப்பு வேலியை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உடனடியாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும், சிறு கனிம விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைக்கப்படும் வேலி வலுவானதாகவும் நீண்ட காலம் பயன்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதற்காக குறைந்தபட்சம் 1.5 மீட்டர், அதாவது சுமார் 5 அடி உயரத்தில் வேலி அமைக்க வேண்டும். கம்பிகளின் தடிமன் மற்றும் அவற்றைத் தாங்கும் கான்கிரீட் அல்லது கல் தூண்களின் உறுதித்தன்மை ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலி அமைப்பதுடன் மட்டும் பாதுகாப்பு நடவடிக்கை முடிந்துவிடாது. குவாரிகள் இருக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட வேண்டும். இந்தப் பலகைகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்க வேண்டும். அந்த இடம் கைவிடப்பட்ட குவாரி என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுவதுடன், அதன் ஆழம் எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும், அந்தப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது என்ற எச்சரிக்கையும் இடம்பெற வேண்டும்.

இந்தப் பணிகள் எந்த அளவுக்கு முடிக்கப்பட்டுள்ளன என்பதை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்துக்கு விரைவாக அனுப்பவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குவாரிகளில் கற்களை வெட்டி எடுப்பது பொருளாதார வளர்ச்சிக்கும் கட்டுமானத் துறைக்கும் தேவையானதாக இருக்கலாம். ஆனால், குத்தகைக் காலம் முடிந்த பிறகு அங்குள்ள ஆபத்தான பள்ளங்களை அப்படியே விட்டுச் செல்வது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது. எனவே, அரசு அறிவித்துள்ள இரண்டு மாத காலக்கெடுவுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் பாதுகாப்புப் பணிகள் முறையாக நிறைவேற்றப்படுமா என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.