ஆளுநரிடம் செல்லும் 'பஞ்சாயத்து'; "பொதுக்குழுவை கூட்டுங்க.." நெருக்கும் சி.வி. சண்முகம் - இறங்கி வரும் எடப்பாடி?

தேர்தலில் அதிமுக 45 இடங்களை வென்றது. 6 பேர் ராஜினாமா செய்ததால் இப்போது கையில் இருக்கும் MLA-கள் எண்ணிக்கை 39. இதில் 18 பேர் வரை அதிருப்தி அணியுடன் தொடர்பில் இருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.
AIADMK Internal Crisis: CV Shanmugam Pressures Edappadi Palaniswami for General Council Meet Amid Defection Row
ஆளுநரிடம் செல்லும் 'பஞ்சாயத்து'; "பொதுக்குழுவை கூட்டுங்க.." நெருக்கும் சி.வி. சண்முகம் - இறங்கி வரும் எடப்பாடி?AI Generated
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இன்று பதவியேற்றார் அர்லேகர். அவர் முன்னிலையில் முதல் பஞ்சாயத்தாகக் குதிரை பேரம் புகாரைக் கொண்டு சென்றுள்ளார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் 15 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு வருவதாகச் செங்கோட்டையன் பேசியதைச் சாட்சியாகக் குறிப்பிட்டு, 6 எம்.எல்.ஏ.க்களைத் தவெக விலைக்கு வாங்கியிருப்பதாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

2026 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.

இதில், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய இருவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, சட்டமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர்.

மற்றவர்களின் ராஜினாமாக்களையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தமிழகம் மற்றுமொரு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.

முந்தைய இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து மீள முடியாமல் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முகாம் தவித்து வருகிறது.

இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில், குறிப்பாகத் தாராபுரத்தில் வெற்றி பெற்றால்கூட, கட்சித் தலைமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கினார் எடப்பாடி பழனிசாமி.

அதிருப்தியில் உள்ள எஸ்.பி. வேலுமணி, தங்கமணி போன்ற மக்களுக்குப் பரிச்சயமான தலைவர்கள் பரப்புரைக்குக்கூட அழைக்கப்படவில்லை.

முடிவில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வலுவான வேட்பாளர்கள் இல்லாமலும், ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட மீண்டும் வெற்றி பெற முடியாத நிலையிலும் அதிமுக உள்ளது.

இந்த நிலையில், அடுத்தடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்களை எப்படிச் சந்திப்பது எனத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி கலக்கத்தில் உள்ளார்.

இதற்கிடையில், சி.வி. சண்முகம், “அதிமுகவில் கருத்து வேறுபாடு உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதிமுக இடைத்தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை அதிமுக தலைமை கூர்ந்து ஆலோசனை செய்து, சீர்திருத்தவும், மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுக்குழுவைக் கூட்டி கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதிமுக தொண்டர்களுக்குத் தேவை ஒரு நம்பிக்கை. அதனை அவர்களுக்குக் கொடுத்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம்” எனப் பேசியுள்ளார்.

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், பி. தங்கமணி, நத்தம் ஆர். விஸ்வநாதன், கே.பி. அன்பழகன், கே.சி. வீரமணி ஆகியோர் அதிருப்தி அணியாக உருவெடுத்து ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தேர்தலில் அதிமுக 45 இடங்களை வென்றது. 6 பேர் ராஜினாமா செய்ததால் இப்போது கையில் இருக்கும் MLA-கள் எண்ணிக்கை 39. இதில் 18 பேர் வரை அதிருப்தி அணியுடன் தொடர்பில் இருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன.

மறுபக்கம் 15 MLA-கள் வருவதாக செங்கோட்டையன் பேசியிருக்கிறார். தவெகவில் டீலிங் பேசுவது யாராக இருக்கும் என்பதே எடப்பாடி பழனிசாமி கணிக்க முடியாததாக உள்ளது.

தவெக ஆட்சி அமைக்கும்போதே 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். அவர்களில் 6 பேர் தவெகவில் இணைந்துவிட்டனர். மீதமுள்ளவர்களில் ஒருவரான லீமா ரோஸ், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து நான் எதுவும் பேச முடியாது” எனப் பொதுவாகப் பேசியுள்ளார்.

சில எம்.எல்.ஏ.க்களைத் தனது பக்கம் திருப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இந்த ஆதரவு நிலையானதாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்” என்றும், “சி.வி. சண்முகம் தனது கருத்துகளை அதிமுக பொதுக்குழுவில் தெரிவிக்கலாம்” என்றும் பேசியுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ.க்களை ஈர்க்கும் முயற்சிகள் தீவிரமடைவதற்கு முன்பும், அதிருப்தியில் இருப்பவர்கள் கிளர்ந்தெழுவதற்கு முன்பும் பொதுக்குழுவைக் கூட்டலாம் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், முதல்கட்டமாகக் கட்சிக்குள் இணக்கத்தை ஏற்படுத்தி, பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதுடன், இழந்த தங்களது பதவிகளைத் திரும்பப் பெறுவதுமே அவர்களின் நோக்கமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

AIADMK Internal Crisis: CV Shanmugam Pressures Edappadi Palaniswami for General Council Meet Amid Defection Row
"நானும் அமைச்சராக இருந்தவன்தான்..." - ஆதவ் முன்னிலையில் டென்ஷன் ஆனா சேகர் பாபு; ஒரே மேடையில் திமுக, தவெக MLA-கள்.. பரபரப்பு சம்பவம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com