தமிழக அரசியலில் அடுத்தடுத்த கட்சி தாவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை தமிழக வெற்றி கழகதில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இருவரும் கடந்த மாதம் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது கையெழுத்திட்ட ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேற்று முன்தினம் நேரில் வழங்கியிருந்தார்.
இதற்கு முன்னதாகவே விராலிமலை தொகுதி முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏ. பதவியை கடந்த (ஜூன் 16) ஆம் தேதி ராஜினாமா செய்திருந்தார். தற்போது இந்த இருவரும் ஆளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதால், அதிமுகவில் இருந்து விலகி TVK-வில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயரும் என சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வருவது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி TVK-வில் இணைந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு முன்னாள் அமைச்சர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளது அதிமுக நிர்வாகிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
கரூர் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அவர் தற்போது அதிமுகவை விட்டு விலகியுள்ளார். இந்த ராஜினாமாக்கள் காரணமாக, 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 47-ல் இருந்து 41 ஆகக் குறைந்துள்ளது. மேலும், முதல்வர் சி. ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியை சேர்த்து தற்போது காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ராஜினாமா செய்த ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கடந்த மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி உத்தரவை மீறி முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அப்போது அவர்கள் TVK-வில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அது அதிகாரப்பூர்வமாகும் சூழல் உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் TVK-வில் இணைந்து வருவது, தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகளையும் எதிர்க்கட்சி அரசியலிலும் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சி. விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மற்றும் குட்கா ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவது அக்கட்சியின் பலவீனமாக மாற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.