

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர். இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அதிமுகவுடன் பாமகவின் அன்புமணி தரப்பு கூட்டணி வைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க சென்ற போது அவரிடம் செய்தியாளர் ‘டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைவாரா?’ என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி ‘எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச முடியாது. சில விஷயங்கள் ரகசியமாக இருந்தால் தான் மரியாதை என தெரிவித்தார்’ எனவே டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் பிரதமர் இந்த மாதம் தமிழக வர உள்ள நிலையில் அவரை கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியின் தலைவர்களை மேடை ஏற்ற திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் பாஜகவின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான கூட்டணியில் அமமுக இணையாது என டிடிவி தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து பேசிய டிடிவி தினகரன் “எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை போன்றது தான் திமுகவை வீழ்த்த அம்மாவின் விசுவாசிகள் ஒன்றிணைந்துள்ளோம். ஒருவர் செய்ததை மறந்து அவருக்கு நன்மை செய்தல் அது மாறிவிடும் அது போல தான் இதுவும்” என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு உள்ள எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் எப்படி ஒன்றிணைந்து செயல்பட போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.