"பாஜக மீது கோபம் இருந்தது... ஆனால் திட்டிவிட்டு வரவில்லை!" - கோவையில் மனம் திறந்த அண்ணாமலை... மதம், தேசியம் குறித்து விளக்கம்

கட்சியை விட்டு வெளியே வந்த பிறகும் 38 நாட்களாக யாரையும் தவறாக பேசவில்லை...
annamalai with modi
annamalai with modi
Published on
Updated on
1 min read

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற "வீ த லீடர்ஸ்" (We The Leaders) அமைப்பின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகிய காரணம், தேசியவாதம் மற்றும் மதம் குறித்த தனது நிலைப்பாடுகளை மீண்டும் ஒருமுறை விரிவாக விளக்கி உள்ளார் பாஜகவில் இருந்து விலகிய பிறகு முதன்முறையாக அது குறித்து பேசிய அண்ணாமலை, "நான் பாஜகவில் இருந்தவன். இந்த இயக்கத்தில் பாஜகவில் இருந்து மட்டுமல்ல, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் பலர் இணைந்துள்ளனர். பாஜகவில் இருந்து ஏன் விலகினேன் என்பது குறித்து இதுவரை எந்த இடத்திலும் பேசியதில்லை. இன்று அதை வெளிப்படையாக கூற விரும்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜக மீது எனக்கு கோபம் இருந்ததா என்றால், ஆம்... இருந்தது. ஆனால் அந்த கோபத்தை பொறுப்புணர்வுடன் கையாள வேண்டியது அவசியம். கட்சியை விட்டு வெளியே வந்த பிறகும் 38 நாட்களாக யாரையும் தவறாக பேசவில்லை. சிலர், பாஜகவை திட்டினால்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்கள். ஆனால், நான் யாரையும் பழிச்சொல் கூறிவிட்டு வெளியே வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேறு ஒரு பாதையை தேர்வு செய்துள்ளோம். அதில் பயணிப்போம், அவ்வளவுதான்" என்று தெரிவித்தார். தேசியம் குறித்த தனது நிலைப்பாட்டையும் விளக்கிய அண்ணாமலை, "நான் தேசியவாதியா என்றால், பெருமையுடன் ஆம் என்று சொல்வேன். இந்தியன் என்பதில் எனக்கு கர்வம் இருக்கிறது. அதே நேரத்தில், அந்த இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர வேண்டும் என்பதற்காகவே எங்களின் போராட்டம்" என்றார்.

மதம் தொடர்பாக பேசிய அவர், "எனது மதம் இந்து மதம். நான் திருநீறும், குங்குமமும் அணிவேன். ஆனால் வீட்டை விட்டு வெளியே வரும்போது, என் மதத்தையும், சாதியையும் வீட்டிலேயே விட்டுவிட்டு வருகிறேன். பொதுவாழ்வில் அனைவருக்கும் சமமான மனிதராகவே நிற்கிறேன். உண்மையான இந்து அனைவரையும் சமமாக பார்ப்பான்; அனைவரையும் சமமாக நடத்துவான். மதத்தை ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை" என்று கூறினார். பாஜகவில் இருந்து விலகியதற்கான காரணம், தனது புதிய அரசியல் பயணம், தேசியவாதம் மற்றும் மதம் குறித்த கருத்துகளை அண்ணாமலை வெளிப்படையாக பகிர்ந்தது, மாநாட்டில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com