அண்ணாமலை vs பாஜக: எதற்கெடுத்தாலும் ‘தேச விரோதி’யா? ‘நறுக்’கெனக் கேட்ட 5 கேள்விகள்… BJP பதில் என்ன?

"மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிற போது, உண்மையிலேயே சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது." - அண்ணாமலை
Annamalai vs BJP: Is Every Question a 'Treason'?.. 5 Sharp Questions Raised & BJP's Response!
அண்ணாமலை vs பாஜக: எதிர்கெடுத்தாலும் 'தேச விரோதி'யா?.. 'நறுக்'கென கேட்ட 5 கேள்விகள்.. BJP பதில் என்ன?
Published on: 
Updated on: 
4 min read

டெல்லியில் நடைபெற்ற கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் போராட்டம் ஒடுக்கப்பட்ட விதத்துக்கு பாஜக முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலைக்கு பதிலடிகொடுக்கும் வகையில் பாஜக தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. "அண்ணாமலையின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும் வேண்டுமென்றே சட்டத்தை மீறுவதற்கும் இடையிலான எல்லையை வேண்டுமென்றே மங்கச் செய்கின்றன." என விமர்சித்துள்ளார் பாஜக செய்திதொடர்பாளர் நாராயண திருப்பதி.

அண்ணாமலை சொன்னது என்ன?

டெல்லியில் பாஜக அரசு காவல்துறையினரைப் பயன்படுத்தி இளைஞர்கள் போராட்டத்தை தடுத்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை. அதன்பிறகு அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்து வருவதாக கூறும் அவர் விளக்கமான பதிவு ஒன்றை வெளியீட்டுள்ளார்.

2011-ல் மோடி சொன்னது சரி!

அண்ணாமலையின் பதிவில், "2011-ல், அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தன் கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்திருப்பேன் என்று கூறினார்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட அமைதியான ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தின் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறைக்கு பதிலளிக்கும் விதமாக திரு நரேந்திர மோடி அவ்ல் இந்த அறிக்கையை வெளியிட்டார். என் கருத்துப்படி, மாண்புமிகு பிரதமர் அப்போது கூறியது முற்றிலும் சரியானது, அதில் எந்தத் தவறும் இல்லை.

ஆனால் இன்றோ, ஒருவர் காலவரையின்றிச் சிறையில் அடைக்கப்படலாம்; அவர் அளிக்கும் பிணை உத்தரவாதங்கள் கூட நிராகரிக்கப்படலாம். அதைவிட வியப்பான விஷயம் என்னவென்றால், தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிணை வழக்குகளைக் கையாள அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சிறப்பு நிர்வாக நீதிபதி (Special Executive Magistrate), அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரை எப்படியெல்லாம் அலைக்கழிக்க முடியும் என்கிற சூழ்நிலை வந்துள்ளது." என சாடியுள்ளார்.

அந்நிய கைக்கூலி?

மேலும், "ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. "அந்நிய கைகூலி" என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, டெல்லியில் CJP அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து மீண்டும் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.

பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். உங்களது வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்து மறக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.

நேற்று நான் கூறியதைப் போல, CJP அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு, அவர்களுடைய பல அணுகுமுறைகள் தவறாக வழிநடத்தப்பட்டவை என்றும் நான் கருதுகிறேன்.

ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்று என்னிடம் கேட்டால்? நிச்சயமாக ஆம் என்பேன்!" எனக் கூறியுள்ளார்.

மத்திய அரசு நியாயமாக பதிலளிக்க வேண்டும்!

மேலும் அண்ணாமலை, "சிலருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தினாலும், மக்கள் மீண்டும் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு மத்திய அரசும் திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

1. போராட்டம் நடத்த அனுமதி கோரி CJP அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?

2. டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் (ACP) ஒருவருக்குச் சிறப்பு நிர்வாக நீதிபதியாக அதிகாரம் வழங்கி, ஒருவரைத் தடுப்புக் காவலில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த நடைமுறை இன்னும் எத்தனை காலம் தொடரும்?

டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் CJP வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த ACP ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார்.

அப்படியானால், தீர்ப்பு எந்தத் திசையில் செல்லும் என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொள்ளலாம்!

3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் ACP எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்?

இது என்ன மாதிரியான விளையாட்டு?

4. எட்டு பிணை உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை உத்தரவாதம் அளிக்க வந்த நபரிடம் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் குறுக்கு விசாரணை நடத்தினார்?

5. நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் பயன்படுத்திய பெல்லட் துப்பாக்கிகள் குறித்தோ, போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) மீறிய டெல்லி காவல்துறையினரின் பிற நடவடிக்கைகள் குறித்தோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?" எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அத்துடன் அவரது பதிவில், "தற்போது, இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தை எட்டிய பிறகு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த CJP நிர்வாகிகள் சிறப்பு நிர்வாக நீதிபதியால் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் தசரா கொண்டாட்டங்களின்போது கரப்பான் பூச்சியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதையும் பார்த்தேன். இதன் மூலம் அவர்களுக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் பெற்றுத் தருவது யார் என்று விசாரித்த போது, ஆச்சர்யத்துக்கு இடமில்லாமல் இதற்குத் தலைமை தாங்கியது பாஜக சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோயல் என்பது தெரிய வந்தது.

எனது கேள்வி மீண்டும் இதுதான்:

பாஜக உண்மையில் CJP அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா?

CJP-ஐ ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக விரும்புகிறதா?

இதே வேகத்தில் சென்றால், CJP அமைப்பு பணம் கொடுத்தாலும் இதைவிடச் சிறந்த விளம்பரக் குழுவைப் பெற்றிருக்க முடியாது!

நேற்று, SIR நடவடிக்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் குறித்தும் இதேபோன்ற கேள்விகளை எழுப்பினேன். SIR செயல்முறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் உண்மையில் என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்டேன்.

மேலும், நமது ஜனநாயக அமைப்புகளில் சில தனிநபர்கள் தவறு செய்திருக்கக்கூடும் என்பதற்காக, எதிர்க்கட்சிகளும் CJP அமைப்பும் நமது ஜனநாயகத்தின் அனைத்து நிறுவனங்களின் மீதும் ஒட்டுமொத்தமாகக் களங்கம் சுமத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.

இறுதியாக, எதற்கெடுத்தாலும் ‘தேசவிரோதி’ என்று முத்திரை குத்தும் போக்கு இதோடு போதும்!

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (FCRA), மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து விசாரணை அமைப்புகளும் எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும், வெளிநாட்டு எதிரிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் இந்தியக் குடிமக்களைக் கண்காணிப்பதற்குப் போதுமான பணியாளர்கள் உள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிற போது, உண்மையிலேயே சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. டெல்லியில் மத்திய அரசு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தன்னைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம்!" என சாடியுள்ளார்.

நாராயண திருப்பதி விளக்கம்

அண்ணாமலைக்கு பதிலளித்த பாஜக தமிழ்நாடு செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி, "திரு.அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் சட்டத்தை மீறிய போராட்டத்திற்கும் வேறுபாட்டை தெளிவுபடுத்தவில்லை. டெல்லியில் CJP தலைவர்களுக்கு ஜந்தர் மந்திரி போராட்டம் நடத்த தெளிவான காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது.

அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சட்ட விரோத நுழைவுகளை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புகளைத் தாண்டி ஏறி குதித்து அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த செயலும், அதற்கு முன்னர் அவர்களே கையெழுத்திட்டிருந்த அமைதிப் பத்திரங்களை மீறிய நடவடிக்கையாகும்.

சிறப்பு நிர்வாக நீதிபதியின் நீதிமன்றக் காவல் உத்தரவுகளும், அதைத் தொடர்ந்த நீதிமன்றக் காவலும் "சட்டத்திற்கு மரியாதை இல்லை" என்ற கலகக்காரர்களின் அனுமதியில்லாத தொடர் போராட்டங்கள், மற்றும் உறுதி மொழி மீறல்கள் ஆகியவையே துல்லியமாகக் குறிப்பிடப்படுகின்றன என்றாலும் உயர் நீதிமன்றம் அவற்றை மறுஆய்வு செய்து விடுவித்தது. அது தான் சட்ட விதி முறை...

ஜந்தர் மந்திரி கூடுவதற்கு குறுகிய கால அறிவிப்பு, முந்தைய நடத்தை, பாதுகாப்பு/போக்குவரத்துக் கவலைகள், உச்ச நீதிமன்ற குறிப்பு போன்ற காரணங்களால் CJP யினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர், அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பிறகு CJP யினர் வாயில்கள்/தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைந்து, கொட்டிகளை ஏற்றி, அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதால், அத்துமீறல், பிணை விதிகள் மீறல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவற்றுக்கான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக, அக்டோபர் 10 அன்று செய்யப்பட்ட கைதுகள் பெரும்பாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருந்த நிலையில் பல சாதாரண போராட்டக்காரர்கள் விரைவாக விடுவிக்கப்பட்டனர். அமைதியைப் பேணுவதற்காக, தலைவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்...

நீட் போராட்டங்களில் இருந்து எழுந்த பெல்லட் துப்பாக்கிச் சூடு குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையும், மத்திய சேமக் காவல் படையும் (CRPF) இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், "நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்று சொல்வது முறையல்ல என்பதோடு பெல்லட் குண்டுகள் சுடப்பட்டன என்று மற்றவர்கள் 'தீர்ப்பு' சொல்வது பொறுப்பான செயல் அல்ல.

ஒரு பாஜக எம்.எல்.ஏ தலைமையிலான ராம்லீலா குழுவினர் 'கரப்பான் பூச்சி' பொம்மை உருவம் கொளுத்தப்பட்டது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தொடர் நிகழ்வு என சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அரசியலுக்காக CJP யை தான் குறிக்கிறது என்று சொல்வது தற்செயலாக கவனத்தை ஈர்த்ததாக தான் கருதப்படும். ஒரு வேளை, அப்படியே நடந்திருந்தாலும், அனுமதியற்ற இடத்தில் CJPயினர் அத்துமீறியதும், பிணை விதிகளை மீறியதையும் நியாயப்படுத்த முடியாது.

அண்ணாமலை அவர்கள் ஜூன் 2026-ல் பாஜகவிலிருந்து விலகினார்.

யாரையும் விமர்சிப்பதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அத்துமீறல், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை மீறியது மற்றும் தடைசெய்யப்பட்ட இடத்தில் வன்முறை போன்ற தொடர் நிகழ்வுகளை அவர் விமர்சிக்காமல் தவிர்க்கும்போது, ​​அவரது விமர்சனம் வலுவிழந்துவிடுகிறது.

போராட்டங்களை மேற்கொள்வது ஜனநாயக உரிமை என்றாலும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறுவது, சட்டத்தை அவமதிப்பது, அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காவல் துறையின் தடுப்புகளை அராஜகமான முறையில் தகர்ப்பது, மீறுவது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகும். தங்களைச் சீர்திருத்தவாதிகள் எனக் காட்டிக்கொள்பவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் சட்டத்தின் ஆட்சி பொருந்தும்." எனப் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com