

விருதுநகரில் “ஸ்டார்ட் ரன் ஸ்டார்ட் டிரக்” என்ற பெயரில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் மற்றும் சிலம்பம் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது மேடையின் பின்புறம் இருந்த பேனரில் தனது பெயரை இரண்டாவதாக ஏன் குறிப்பிட்டுள்ளீர்கள்? என அங்கிருந்த அதிகாரியிடம் கேட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இனி இது நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என சமாதானப் படுத்தியுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் "ஸ்டார்ட் Run - ஸ்டாப் Drugs" என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், அங்கிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவைக் கடந்து, மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நிறைவடைந்தது. இந்த ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று கலந்து கொண்டனர். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதை தொடர்ந்து சிலம்பம் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. அந்த மேடைக்கு பின்னால் பேனர் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பேனரில் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இடம்பெற்றிருந்தது. இரண்டாவதாக இடம் பெற்றிருந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் மேடையில் போடப்பட்ட நாற்காலிகளால் மறைக்கப்பட்டும் சரியாக தெரியாமலும் போனது. இதனை கண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி அங்கிருந்த அதிகாரியிடம் “எனது துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி இது.. புரோட்டாக்கால் படி முதலமைச்சர் பெயருக்கு பின் எனது பெயர் இடம்பெற வேண்டும். இதை பலமுறை சொல்லி விட்டேன், மீண்டும் மீண்டும் ஏன் இந்த தவறை செய்கிறீர்கள்” என்று கடிந்து கொண்டார்.
உடன் அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் “இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வோம்” என அவரை சமாதானப்படுத்தினார். விருதுநகர் மாவட்ட தவெக அமைச்சர்களுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல், தற்போது அரசு விழாவில் அதிகாரிகள் முன்னிலையிலேயே வெளிப்படையாக அரங்கேறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.