கடற்கரை சாலையில் தொடங்கிய 'Start Run Stop Drugs' மரத்தான்... மக்களோடு மக்களாக இணைந்து பங்கேற்று வரும் முதலமைச்சர்!

கல்லூரிகள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது...
கடற்கரை சாலையில் தொடங்கிய 'Start Run Stop Drugs' மரத்தான்... மக்களோடு மக்களாக இணைந்து பங்கேற்று வரும் முதலமைச்சர்!
Published on
Updated on
1 min read

சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட 'Start Run Stop Drugs' போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை சென்னை காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகே முதலமைச்சர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து மரத்தானில் பங்கேற்று வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று, "போதைப்பொருளில்லாத தமிழகம்" என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

தமிழ்நாடு போதையில்ல மாநிலமாக மாற வேண்டும் என்பதை முன்னிட்டு இளைஞர்களை மையமாகக் கொண்ட பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, விளையாட்டின் மூலம் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலக்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஓட்டம் அரசால் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்து அரசியல் கட்சிகள் இடையே கடும் விவாதம் நிலவி வரும் சூழலில், அரசின் இந்த விழிப்புணர்வு முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகள் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், "போதைப்பொருளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" என்ற அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. நேற்று மாலையே தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு பாடலையும் முதலமைச்சர் வெளியிட்டிருந்தார். இந்த பாடல் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் இணைந்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை கடற்கரை சாலையில் சென்னை, காமராஜர் சாலை, பேரறிஞர் அண்ணா நினைவிடம் அருகில் தொடங்கி கலங்கரை விளக்கம் வரை 6 கிலோமீட்டர் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததுடன், விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்து, போதைப்பொருளுக்கு எதிரான சமூக இயக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com