சட்டப்பேரவை தொடக்கத்திலேயே அமளி.. “தலைநகரமா? கொலைநகரமா?” - என எதிர்க்கட்சிகள் முழக்கம்!

கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் “தலைநகரமா? கொலைநகரமா?” என முழக்கங்களை எழுப்பினர்
சட்டப்பேரவை தொடக்கத்திலேயே அமளி.. “தலைநகரமா? கொலைநகரமா?” - என எதிர்க்கட்சிகள் முழக்கம்!
Published on
Updated on
1 min read

3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. பேரவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் “தலைநகரமா? கொலைநகரமா?” என முழக்கங்களை எழுப்பினர். தங்களது கவன ஈர்ப்பு தீர்மானங்கள் குறித்து உடனடியாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சட்டப்பேரவை தொடங்கிய உடனேயே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனிநபர் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தையும் அவர் சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். OBC பிரிவினரின் உண்மையான மக்கள் தொகையையும், அவர்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை அறிந்து கொள்வதே சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், OBC சாதிகளுக்கான பட்டியலை பயன்படுத்தி, மக்கள் தங்களது சாதிப் பெயரைத் தேர்வு செய்யும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் ஓட்டுநர் ஊதியம் மற்றும் எரிபொருள் தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சம்பளங்கள் வழங்குவது தொடர்பான திருத்த மசோதாவை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இன்றைய பேரவை நிகழ்வுகளில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பின்னர் பதிலுரை வழங்க உள்ளார். முதலமைச்சரின் பதிலுரைக்குப் பிறகே உதயநிதி ஸ்டாலினின் தனிநபர் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளார். இதனால் இன்று சட்டப்பேரவையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர் கட்சிகளுக்கு இடையே மேலும் விவாதம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com