தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல் பல்வேறு அரசியல் விவகாரங்கள் விவாதப்பொருளாகி வருகின்றன. இந்நிலையில், தவெக அரசை விமர்சிக்கும் வகையில் பாஜக தமிழ்நாடு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஏஐ காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்தக் காணொளியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் நடித்த திருவிளையாடல் படத்தின் முக்கிய வசனத்தை செயற்கை தொழிநுட்பம் மூலம் சிவாஜியாக முதல்வர் விஜய்யை மாற்றி தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையில் வசனங்களை அமைத்துள்ளனர்.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், டைம்ஸ் நவ் உள்ளிட்ட வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பாஜகவின் இந்தச் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக ஐடி விங் பாஜகவை விமர்சித்து காணொளி வெளியிடுமா என நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNaduபக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம். அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால் முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக அரசை விமர்சித்து பாஜக வெளியிட்ட காணொளி பேசுபொருளாகியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக தவெக தரப்பில் இதேபோன்ற காணொளி வெளியிடப்படுமா என்று இடும்பாவனம் கார்த்திக் பதிவிட்டுள்ள சம்பவமும் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த இரண்டு பதிவுகளையும் பார்த்த அரசியல் விமர்சகர்கள் சிலர் இதற்கு தமிழக வெற்றி கழக ஐடி விங் என்ன பதிலடி கொடுக்க போகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்