"உசிலம்பட்டியில்.. காலை உணவுத் திட்டம் தாமதம்.." - டெண்டர் விவகாரத்தில் என்ன நடந்தது? தவெக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு?

50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
Usilampatti Tender Dispute
Usilampatti Tender Dispute
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விரிவுபடுத்தினார். இதன்மூலம் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்தது.

அதே நாளில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 4,500-க்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், உசிலம்பட்டி பகுதியில் உள்ள சில பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்கம் முழுமையாக தொடங்கவில்லை என்ற புகார்கள் தற்போது எழுந்துள்ளன. இதற்கு அந்தப் பகுதிக்கான உணவு வழங்கும் ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட சட்டச் சிக்கலும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

உசிலம்பட்டி நகராட்சிப் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரில், வையராஜா கேட்டரிங் நிறுவனத்தை தேர்வு செய்ததை எதிர்த்து 'கரிஷ்மா டேரிடிங் கார்பரேஷன் நிறுவனம்' மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகியது.

டெண்டர் மதிப்பீட்டில் சில முரண்பாடுகள் இருப்பதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 2-ம் தேதி டெண்டரை இறுதி செய்வதற்கும் பணியாணை வழங்குவதற்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. ஏற்கெனவே பணியாணை வழங்கப்பட்டிருந்தால் அதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும், அந்த இடைக்கால உத்தரவு செப்டம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, டெண்டர் வழங்கப்பட்ட விதம் தொடர்பாக உசிலம்பட்டி எம்.எல்.ஏ விஜய் மகாலிங்கத்தின் பெயரையும் இணைத்து சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. "குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்க அவர் பரிந்துரை செய்ததாக" செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்ததாக இதுவரை கிடைத்த நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

மேலும், அவரது தொகுதியில் உள்ள குவாரிகள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்களில் எம்.எல்.ஏ தேவைக்கு அதிகமாக தலையிடுவதாகவும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக எங்கும் புகார்கள் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அரசால் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம் உசிலம்பட்டியின் அனைத்து தகுதியான பள்ளிகளிலும் தற்போது எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது, டெண்டர் விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன, மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் எப்போது சரியாகும் என்பதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com