மணல் கொள்ளை விவகாரத்தில்... முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு! 34 இடங்களில் அதிரடி சோதனை?

28 மணல் குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது
DMK Duraimurugan
Published on: 
Updated on: 
2 min read

தமிழகத்தில் மணல் குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 34 இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், மணல் குவாரி முறைகேடுகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ.1,427 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மணல் குவாரி முறைகேடு விவகாரம்?

தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த வருமானத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் குவாரி தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரத்தினம், சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்டோரின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் அப்போது சோதனை நடைபெற்றது. மேலும், நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரகம், தமிழ்ச்செல்வன் மற்றும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதில் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஓய்வுபெற்ற முதன்மை தலைமைப் பொறியாளர்கள் ஏ.முத்தையா, ராமமூர்த்தி உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள், 10 தனியார் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1,427 கோடி வருவாய் இழப்பு?

2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 28 மணல் குவாரிகளில் ஆற்று மணல் எடுக்கும் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிப்படையான டெண்டர் முறைக்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், கனிமத் திட்ட விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிச் சீட்டுகள் என்ற பெயரில் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, அவை உண்மையானவை போலப் பயன்படுத்தப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு குவாரிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளால் அரசுக்கு ரூ.1,427 கோடியே 34 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

34 இடங்களில் சோதனை... ஆவணங்கள் பறிமுதல்!

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 34 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் வழக்கு விசாரணைக்குத் தொடர்புடைய 825 ஆவணங்கள், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த மணல் குவாரி முறைகேடு விவகாரம் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குப்பதிவு மற்றும் சோதனைகளால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையில் வெளியாகும் தகவல்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் வரை அவர்கள் குற்றமற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்