

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும், அதே நேரத்தில் இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர், “காவிரி நமது உயிராதாரம். அது நமது உணர்வோடு கலந்த ஒன்று. காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் எண்ணம் நமது அரசுக்கு இல்லை. மேகதாது விவகாரத்தில் இந்த அவையில் நாம் அனைவரும் ஒன்றாகத்தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். காவிரி நடுவர் மன்றத்தின் விதிகளின்படி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்” என்றார்.
“காவிரி நதிநீர் பங்கீட்டிலும் சரி, மேகதாது அணை கட்டும் விவகாரத்திலும் சரி, தமிழ்நாட்டின் உரிமையை நமது அரசு ஒருபோதும் விட்டுத்தராது. அதேநேரத்தில், கர்நாடகாவில் சில அணைகள் கட்டுவதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதே சட்டமன்றத்தில் 1969ஆம் ஆண்டிலேயே விவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? அப்போது ஏன் அணை கட்ட அனுமதிக்கப்பட்டது? என்று கேட்டு சீப் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை” என்றும் முதலமைச்சர் கூறினார்.
மேலும், காவிரி விவகாரத்தை மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும் கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், “எந்தக் கட்சி ஆள்கிறது, எந்தக் கட்சிக்கு பெருமை கிடைக்கிறது, யாருக்கு பெருமை கிடைக்கிறது என்பதைப் பார்க்கக்கூடாது” என்று கடந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் தெரிவித்த கருத்தை நினைவுபடுத்த விரும்புவதாக கூறினார். காவிரி பிரச்சினையில் தொடர்புடைய இரு மாநிலங்களையும் ஒன்றிய அரசு அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று இந்த சட்டமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அதன் பின்னர் அரசியல் சூழ்நிலைகளிலும், காவிரி விவகாரத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம் என்றும் அவர் கூறினார். “சட்டப்படி இந்தப் பிரச்சினையை அணுகுவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில், பேச்சுவார்த்தை மூலம் ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று நினைத்துதான் பெங்களூரு செல்வது குறித்து நான் கேட்டேன். பகை நாடுகளே ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்றன. அப்படியிருக்கும்போது பக்கத்து மாநிலங்களுடன் நாம் பேசக்கூடாதா? என்ற எண்ணத்தில்தான் இதனை அணுகினேன்” என்று முதலமைச்சர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து, பெங்களூரு செல்வது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், அவமானம் ஏற்பட்டால் என்ன செய்வது என சிலர் கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், “அப்படி ஏதேனும் அவமானம் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டு மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டின் நலனுக்காக எந்தத் தனிப்பட்ட விமர்சனத்தையும் எதிர்கொள்ள நான் தயார்” என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக தன் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதலமைச்சர், காவிரி பிரச்சினை குறித்து நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் விரிவான விளக்கம் அளிப்பார் என்றும் கூறினார். அதேபோல், காவிரி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காப்பீடு தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தெளிவான விளக்கத்தை வழங்குவார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, குறுவை சாகுபடி நிவாரணத் தொகுப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். “இது எப்படி அவர்களுக்கு தெரியாமல் போனது என்று தெரியவில்லை. முன்பு எப்போதாவது செய்தித்தாள் படித்திருந்தால் இது அவர்களுக்கு தெரிந்திருக்கும்” என்று எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்