சென்னை: தென்னிந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் ஒரு பொன்னான நாள் இன்று. தமிழ்நாட்டின் முதல் குளிரூட்டப்பட்ட (ஏசி) மின்சார புறநகர் ரயில் சேவை இன்று (ஏப்ரல் 19, 2025) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. 12 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில், சென்னை மற்றும் புறநகர் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு இடையே சாதாரண மின்சார ரயில்களே இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த நெரிசலான வழித்தடங்களில் ஏசி மின்சார ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பது பயணிகளின் பல ஆண்டு கால விருப்பமாக இருந்தது.
பயணிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது, இந்த ஏசி ரயில் சேவையையும் சேர்த்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அப்போதைய தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது.
இந்த புதிய சேவை குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களில் ஏற்கனவே குளிரூட்டப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், சென்னையிலும் ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயில் சேவை இன்று முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் வசதியாகவும், இனிமையாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை," என்று தெரிவித்தனர்.
இன்று காலை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து முதல் ஏசி மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய ஏசி மின்சார ரயிலின் டிக்கெட் கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,
சென்னை கடற்கரை - தாம்பரம் (29 கி.மீ): ₹95
குறிப்பிட்ட சில நிலையங்களுக்கு இடையே 9 கி.மீ தூரத்திற்கு: ₹35
குறிப்பிட்ட சில நிலையங்களுக்கு இடையே 24 கி.மீ தூரத்திற்கு: ₹70
செங்கல்பட்டு வரையிலான முழு தூரத்திற்கு (34 கி.மீ): ₹95
என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏசி ரயில் சேவையின் நேர அட்டவணை:
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ஏசி மின்சார ரயில்களின் நேர அட்டவணை பின்வருமாறு:
ரயில் எண் - 49003: சென்னை கடற்கரையில் இருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் வழியாக காலை 8:35 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
ரயில் எண் - 49004: செங்கல்பட்டில் இருந்து காலை 9:00 மணிக்கு புறப்பட்டு பரனூர், சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரம், திரிசூலம், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் வழியாக காலை 10:30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
ரயில் எண் - 49005: சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 3:45 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மாலை 5:25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.
ரயில் எண் - 49006: செங்கல்பட்டில் இருந்து மாலை 5:45 மணிக்கு புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக இரவு 7:15 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
ரயில் எண் - 49001: சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சானிடோரியம் வழியாக இரவு 8:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில் எண் - 49002: தாம்பரத்தில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், சானிடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக காலை 6:45 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
தெற்கு ரயில்வேயின் இந்த புதிய முயற்சிக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிரூட்டப்பட்ட ரயில் சேவை பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சேவையை மற்ற புறநகர் வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்