“முதல்வர் படைப்பகம்” பெயரில் மாற்றமா? - 'முதல்வர்' என்ற வார்த்தை நீக்கப்பட்டதாக வெடித்த சர்ச்சை.. சென்னை மாநகராட்சி விளக்கம்!

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளது...
muthalvar padaipagam
muthalvar padaipagam
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 'முதல்வர் படைப்பகம்' மையங்களின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய டெண்டர் ஆவணங்களில் 'முதல்வர் படைப்பகம்' என்பதற்கு பதிலாக 'படைப்பகம்' என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்ததால், 'முதல்வர்' என்ற சொல் நீக்கப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியாகின. சென்னை மாநகராட்சி சார்பில், இந்த மையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக சமீபத்தில் புதிய டெண்டர் கோரப்பட்டது. அந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இதுவரை 'முதல்வர் படைப்பகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்த பெயர், 'படைப்பகம்' என மட்டுமே இடம்பெற்றிருந்தது. இதையடுத்து, அரசின் முக்கிய திட்டத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய இந்த திட்டம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு நவீன கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது செயல்பட்டு வரும் இந்த மையங்களில் அமைதியான வாசிப்பு அரங்குகள், நூலக வசதி, அதிவேக வைபை, கணினி வசதி, அரசுப் பணித் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரிலும் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது 'முதல்வர் படைப்பகம்' பெயரிலும் மாற்றம் ஏற்பட்டதாக வெளியான தகவல் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றம் நிர்வாக ரீதியானதா அல்லது அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகராட்சி இது குறித்து தெளிவான விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் மொத்தம் 24 முதல்வர் படைப்பகங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதில் 15 மையங்கள் ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 9 மையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் என்பது பாதுகாவலர், தூய்மைப் பணியாளர், வரவேற்பாளர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிப்பதற்கான பராமரிப்பு ஒப்பந்தம் மட்டுமே என்றும், முதல்வர் படைப்பகங்கள் தனியார்மயமாக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், 'முதல்வர் படைப்பகம்' திட்டத்தின் பெயரில் எந்த அதிகாரப்பூர்வ மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், டெண்டர் ஆவணங்களில் இடம்பெற்ற வார்த்தைப் பயன்பாட்டை வைத்து தவறான புரிதல் ஏற்பட வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com