

தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது, திமுகவின் குற்றச்சாட்டுகள், குதிரை பேரம் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்து பேசிய அவர், "முதல்வர் விஜயை மிகவும் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதால், சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகே காவல்துறை கைது செய்துள்ளது. இது வழக்கமான சட்ட நடைமுறையே தவிர, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல" என்றார்.
மேலும், "தவறு செய்தால் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். ஊழல் செய்தவர்களுக்கு சமரசம் கிடையாது. தேவையில்லாமல் அவதூறு பேசினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய ஆட்சியில் யாருக்கும் செட்டில்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து கடுமையாக விமர்சித்த அமைச்சர், "அவரைப் போன்ற நபர்களை தமிழக வெற்றி கழகத்தில் எந்த சூழ்நிலையிலும் சேர்க்க மாட்டோம். அவர் தவமிருந்தாலும், முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் கட்சியில் இடமில்லை. தென் தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் அவர்" என்று கூறினார்.
குதிரை பேரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "எங்கள் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேரம் பேச முயற்சி நடந்ததாக ஆதாரங்களுடன் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. அதன் விசாரணையில் அரசுக்கு எந்தத் தலையீடும் இல்லை" என்றார். திமுக மூத்த தலைவர்கள் குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். "செந்தில் பாலாஜி போன்றவர்கள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தல் இல்லாமல் செயல்பட முடியாது. விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்தால், சட்டப்படி யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் மீது ஆதாரம் இருந்தால் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
மு.க. ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட அரசியல் கருத்துகளையும் அவர் விமர்சித்தார். "30 நாட்கள் இந்த அரசு நீடிக்காது என்று எந்த அடிப்படையில் கூறினார்? திமுக தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்தே அந்தக் கட்சியின் அரசியல் பலம் குறைந்து விட்டது. திமுக உண்மையாக மீள வேண்டும் என்றால், அக்கட்சியின் குடும்ப அரசியல் முடிவுக்கு வர வேண்டும்" என்று கூறினார். எதிர்க்கட்சிகளிலிருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணையும் எம்எல்ஏக்கள் குறித்து பேசிய அமைச்சர், "யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. அவர்களே தங்களது அரசியல் முடிவை எடுத்து ராஜினாமா செய்து எங்கள் கட்சியில் இணைகிறார்கள். இருப்பினும், கட்சியின் கொள்கைகளில் எந்த சமரசமும் கிடையாது. சிலரை சேர்க்க வேண்டாம் என்றும் நாங்களே முடிவு செய்துள்ளோம்" என்றார்.
இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "இன்றே தேர்தல் நடந்தாலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களிடம் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. தேர்தலை சந்திக்க எந்தவித அச்சமும் இல்லை. மக்களுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். இறுதியாக, "ஒருவரின் அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கும், தனிப்பட்ட முறையில் அவதூறு பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.