"முடிஞ்சிடுச்சான்னு கேட்டாங்க.. முடிஞ்சிட்டு-னு சொன்னேன்.. அதை போய் வைரல் ஆக்கிட்டாங்க" - மு.க.ஸ்டாலின் பேச பேச வெடித்த சிரிப்பலை

மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்த தூண்களில் ஒருவராகவும் திகழ்ந்ததை அவர் நினைவுகூர்ந்தார்...
"முடிஞ்சிடுச்சான்னு கேட்டாங்க.. முடிஞ்சிட்டு-னு சொன்னேன்.. அதை போய் வைரல் ஆக்கிட்டாங்க" - மு.க.ஸ்டாலின் பேச பேச வெடித்த சிரிப்பலை
Published on
Updated on
2 min read

திருச்சியில் நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தனது வீடியோ குறித்து மிகவும் கலகலப்பாகப் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

குறிப்பாக, திமுக மற்றும் அன்பில் பொய்யாமொழி குடும்பத்திற்கு இடையே உள்ள தலைமுறை கடந்த நட்பைப் பற்றி உருக்கமாகப் பேசிய அவர், நேற்று இரவு நடைபெற்ற கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்தும் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.அன்பில் பொய்யாமொழி குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே இருப்பது வெறும் அரசியல் நட்பு மட்டுமல்ல, அது ஒரு குடும்ப உறவு என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். மறைந்த அன்பில் பொய்யாமொழி அவர்கள் கருணாநிதிக்கு உற்ற நண்பராகவும், திருச்சி மாவட்டத்தில் திமுகவை வளர்த்தெடுத்த தூண்களில் ஒருவராகவும் திகழ்ந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

அந்த நட்பு இன்று உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என அடுத்த தலைமுறைக்கும், ஏன் அவர்களின் மகன்களான இன்பநிதி மற்றும் இனியன் வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.நேற்று இரவு வரை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி, ஒப்பந்தங்களை வெற்றிகரமாக முடித்துவிட்டுத்தான் இந்தத் திருமண விழாவிற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். அப்போது கார் ஏறும் போது அவர் காட்டிய ஒரு செய்கை சமூக வலைதளங்களில் 'ஆல் பினிஷ்' (All Finish) என்ற பெயரில் வைரலாகி வருவதைப் பற்றி அவர் சுவாரசியமாகப் பேசினார்.

“பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா என்று கேட்டார்கள், நான் முடிந்துவிட்டது என்று கையை அசைத்துச் சொன்னேன். அது தற்போது பெரிய அளவில் வைரலாகிவிட்டது” என்று அவர் சிரித்தபடி விளக்கமளித்தார்.இந்தத் திருமணத்தை முடித்த கையோடு உடனடியாகச் சென்னை செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் கூறினார். மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள் என்பதால், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யும்போது உடன் இருக்க வேண்டும் என்று அவர் விரைவாகக் கிளம்பினார். இந்த அவசரமான சூழலிலும், அன்பில் மகேஷ் இல்லத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்ற ஆவலில் தான் வந்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மணமக்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், இது ஒரு காதல் திருமணம் என்றும், தொடக்கத்தில் பெண்ணின் தாயார் சுகி இதற்குச் சம்மதிக்கவில்லை என்றும் ஒரு ரகசியத்தை உடைத்தார். இருப்பினும், குடும்பப் பெரியவர்கள் பேசிச் சம்மதிக்க வைத்ததாகத் தெரிவித்த அவர், மணமக்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறியது போல 'வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொடராய்' பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.

இதுபோன்ற தமிழகத்தின் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள மாலை முரசு வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com